Uncategorized சினிமா செய்திகள்

எப்போதும் சிரிப்பது எப்படி? – ஹன்சிகாவுடன் ஓர் உரையாடல்

ஹன்சிகாவின் பிரதான அடையாளமே அழகான சிரிப்புதான். 2010 ஆம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அவர் அறிமுகமானபோது எப்படி புன்னகையுடன் இருந்தாரோ அது ஏராளமான படங்கள் நடித்த பின்பும் திருமணம் ஆன பின்பும் 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது.

மனோஜ்தாமோதரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பாட்னர் படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காகச் சென்னை வந்திருந்தார்.

அப்போது அவருடன் ஒரு சந்திப்பு.

1. பாட்னர் படம் குறித்துச் சொல்லுங்கள்..?

இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட படம்.தோற்றத்தில் ஓர் அழகான பெண்ணாக இருப்பேன். என்னுடைய செயல்கள் அனைத்தும் ஆண் போலவே இருக்க வேண்டும். சவாலான வேடமாக இருந்தது, அதில் சரியாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

மது அருந்திவிட்டு போதையில் இருப்பது போல் நடிக்க வேண்டும் என்றால் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். ஏற்கெனவே போகன், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் அது போல் நடித்திருக்கிறேன்.இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கின்றன.அவை எனக்குச் சவாலாக இருந்தன.

2.இப்போது நடிக்கும் படங்கள்..?

தெலுங்கில் இரண்டு படங்கள், தமிழில் கார்டியன், காந்தாரி உள்ளிட்ட படங்கள், என்னை மையப்படுத்தி உருவாகியுள்ள ஓர் இணையத்தொடர் ஆகியனவற்றோடு இன்னும் சில படங்கள் இருக்கின்றன.

3.திருமணத்துக்குப் பின்பும் ஓய்வின்றி நடிக்கிறீர்களே?

நான் ஏற்கெனவே சொன்னது போல் திருமணத்தால் மோதிரம் மட்டும்தான் மாறியுள்ளது. மற்றபடி எதுவும் மாறவில்லை. நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கின்றன.

4.குழந்தை பெற்று தாய்மை அடைவது எப்போது..?

கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள்தானே ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு கேள்வி தேவையா?

5.ஏற்கெனவே நிறைய குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறீர்கள். அது தொடருகிறதுதானே?

இதுவரை 31 குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கிறேன்,ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலவு செய்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கவில்லை. அவர்களுடைய படிப்பு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் செய்து வருகிறேன்.அவர்களுக்கு உயர்தரக் கல்வியைக் கொடுக்க வேண்டும். மும்பையில் கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது, அது எனக்குச் சவாலாக இருந்தாலும் இதுவரை அதைச் சரியான முறையில் செய்து வருகிறேன். தற்போது அவர்களுக்காகக் கட்டிடம் ஒன்றைக் கட்டி வருகிறேன். அவர்களுடைய அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதையும் என் கடமையாக நினைக்கிறேன்.

6.இவ்வளவு பொறுப்புடன் இருக்கிறீர்கள்.அதேசமயம் எப்போதும் புன்சிரிப்புடனே இருக்கிறீர்கள். இது எப்படி முடிகிறது.?

இயல்பிலேயே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். நான் நகைச்சுவைப் படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன். ஜாலியாக இருப்பேன். அதனால் சிரிப்புடன் இருக்கிறேன் என நினைக்கிறேன்.

7.திரைப்படத்தில் ஆண் போல நடித்துவிட்டீர்கள். நிஜத்தில் ஆணாக விருப்பமா? அப்படியென்றால் யாராக விருப்பம்?

என்ன இப்படியெல்லாம்? நான் ஆண்பிள்ளையாக மாறுவது என்றால் அமெரிக்கா அதிபர் ஜோபைடனாக மாறிக்கொள்கிறேன்.

8.திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படி உணர்கிறீர்கள்?

இந்த 20 ஆண்டுகளில் கொரோனா காலம் தவிர எல்லா வருடங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டேயிருந்தேன்.பல மொழிகள், பல்வேறு கதாநாயகர்கள் என நீண்ட பயணம்.இதனால், நான் நிறையக் கற்றுக்கொண்டேன். கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.அளவுகடந்த அன்பு செலுத்தும் இரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருப்பதால் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

– குமார்

Related Posts