சைரன் படத்துக்குக் கிடைத்த விலை – படக்குழு மகிழ்ச்சி
ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சைரன்”.இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில்,இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில்,சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.சாந்தினி தமிழரசன், அனுபம்கெர், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை திலீப்சுப்பராயன் அமைத்துள்ளார்.
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார்.
ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம்ரவி விடுமுறையில் வெளி வந்த பிறகு என்ன நடக்கிறது? என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்களாம்.
இப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகியுள்ளதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.
இப்படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையின் விலை சுமார் பதினெட்டு கோடி என்று சொல்லப்படுகிறது.
இணைய ஒளிபரப்பு உரிமை இன்னும் நடக்கவில்லை.அது நடந்தால் அதிலும் பெரும்தொகை கிடைக்கும் என்பதால் மகிழ்வுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், வெளியீட்டுத் தேதியை அறிவித்து படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் வேகமாக இறங்கியுள்ளது.
முதன்முறை மாறுபட்ட தோற்றமொன்றில் ஜெயம்ரவி நடித்திருப்பதால் அவருடைய இரசிகர்கள் சைரன் படத்தின் வெளியீட்டை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.











