மலையாள இயக்குநர் ஷாபி மறைந்தார்
மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ஷாபி.பிரபல இயக்குநர் சித்திக்கின் மருமகன் இன்னொரு மலையாள இயக்குநர் ரபியின் சகோதரர் ஆகிய அடையாளங்களும் இவருக்கு உண்டு.
சனவரி 16 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (சனவரி 25.2025) 11 மணியளவில் காலமானார்.அவருக்கு வயது 56.
ஜெயராம் கதாநாயகனாக நடித்த ஒன் மேன் ஷோ (2001) மூலம் இயக்குநராக அறிமுகமானார்.திலீப் நடித்த கல்யாணராமன்,ஜெயசூர்யா நடித்த புலிவால் கல்யாணம், மம்முட்டி நடித்த தொம்மனும் மக்களும்,மாயாவி,சட்டம்பிநாடு,பிருத்விராஜ் நடிப்பில் சாக்லேட்,லாலிபாப் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் மஜா.விக்ரம்,பசுபதி,அசின் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் தொம்மனும் மக்களூம் படத்தின் தமிழாக்கம்.அந்தப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ்த்திரையுலகிலும் கால்பதித்தவர்.மஜா படத்தின் தமிழாக்கத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர் இயக்குநர் விஜி என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாபி கடைசியாக இயக்கிய படம் ஷரஃப் யு தீன் நடித்த ஆனந்தம் பரமானந்தம் (2022).
அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முழுநீளத் திரைக்கதையை எழுதி வைத்துக் கொண்டு நடிகர்களின் தேதிக்காகக் காத்திருந்தார்.
பெரும்பாலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டே திரைப்படங்கள் எடுத்தார்.உண்மைக்கு நெருக்கமான கதைகளும் காட்சிகளும் இவருடைய சிறப்பம்சம்.
அவர் மனைவி பெயர் ஷமிலா. அலீமா ஷெரின்,சல்மா ஷெரின் ஆகிய இரு பெண்குழந்தைகள் உண்டு.திருமண வயதை எட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் ஷாபியின் இறுதிச்சடங்கு இன்று கொச்சியில் உள்ள இஸ்லாம் ஜமா அத்தில் நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.











