சினிமா செய்திகள்

மரபை மீறி வெளியீட்டுத்தேதி அறிவிப்பு – சர்ச்சையில் சிக்கிய காலா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார்.

இந்தப் படம் வருகிற ஏப்ரல் 27ந்தேதி திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதே தேதியில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2ஓ படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது அந்தத் தேதியில் காலா வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு படங்களுக்கான போட்டியில் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியை தணிக்கைச்சான்று பெற்ற பின்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் இவர்கள் தணிக்கைக்கு முன்பே தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

சட்டப்படி தவறில்லை என்பதால் அறிவித்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து கடைபிடிக்கும் மரபுக்கு எதிராக நடந்திருக்கிறது என்கிற குரல்கள் இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டன.

Related Posts