கலகலப்பு 2 விமர்சனம்
பூர்வீக சொத்தைத் தேடிக்கண்டுபிடிக்கக் காசிக்குப் போகும் ஜெய், காசியிலேயே கஷ்ட ஜீவனம் நடத்தும் ஜீவா, இவர்கள் இருவரோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மிர்ச்சிசிவா ஆகிய மூவரோடு ஒரு தமிழக அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் காசியில் இருக்க அதைத்தேடி அலையும் ஒரு கூட்டம். இவ்வளவையும் வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார் சுந்தர்.சி.
முதல் பாதி முழுக்கக் காசியில் அப்புறம் கொஞ்ச நேரம் காரைக்குடிக்கு வந்துவிட்டு திரும்பவும் காசிக்குப் போய் ப்டத்தை முடித்திருக்கிறார்.
ஜெய், நிக்கிகல்ராணி காதல் கதை, ஜீவா, கேத்தரின் தெரசா காதல்கதை, மிர்ச்சிசிவாவின் திருட்டுக்கதை ஆகியனவற்றைக் கோர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்..
சதீஷ், ரோபோசங்கர், மனோபாலா,ஜார்ஜ், முனீஸ்காந்த், ராதாரவி, விடிவி கணேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.
நிக்கி கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். கேத்தரின் அளவாய் இருக்கிறார். ஜீவா கேத்தரின் காதல் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.
சுந்தர்சியின் வழக்கமான காட்சிகள் அவ்வளவும் இதிலும் அப்படியே இடம்பெற்றிருக்கின்றன. காசிக்குக் கூட்டிப்போன நடிகர்களைக் கொஞ்சம் கூட வீணடிக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார் சுந்தர்சி. அதனால் எல்லாக்காட்சிகளிலும் எல்லோரும் வருகிறார்கள்.
ஹிப்ஹாப்தமிழா ஆதி இசையில், காரைக்குடி பச்சரிசி, ஒரு குச்சி ஒரு குல்பி பாடல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை.
இரட்டை அர்த்த வசனங்கள் தூக்கலாக இருக்கின்றன.
நாயகர்களின் இருப்பு, நாயகிகளின் அழகு, அங்கங்கே சிரிப்பு, பாடல்கள் ஆகியனவற்றைச் சரியான விகிதத்தில் கலந்திருந்தாலும் சுவை குறைவாகவே இருக்கிறது.











