Uncategorized சினிமா செய்திகள்

டி.ஆர் பணம் கொடுத்தார்! ரஜினி ஓட்டுப்போடவராதது ஏன்? பாரதிராஜா நீக்கமா? – இராதாகிருஷ்ணன் பேட்டி

2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் 1,050 வாக்குகள் பதிவானது.

நவம்பர் 23 ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில், தலைவருக்கான வாக்குகளில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டி.ராஜேந்தர் 388 வாக்குகள், பி.எல்.தேனப்பன் 88 வாக்குகள் பெற்றனர். 17 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

செயலாளர் பதவிக்கு முரளி அணியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணனும், டி.ஆர் அணியைச் சேர்ந்த மன்னனும் வெற்றி பெற்றனர்.

துணைத் தலைவர்களாக சுயேச்சையாகப் போட்டியிட்ட கதிரேசன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்.வி.உதயகுமார்,அழகன் தமிழ்மணி,மனோபாலா,கே.பி.பிலிம்ஸ் பாலு,மனோஜ்குமார்,ஷக்தி சிதம்பரம்,செளந்தரபாண்டியன்,ஆர்.மாதேஷ்,விஜயமுரளி,ஏ.எல்.உதயா,பைஜா டோம்,டேவிட் ராஜ்,பாபு கணேஷ்,
ராஜேஸ்வரிவேந்தன்,ஏ.எம்.ரத்னம்,அன்பாலயாகே.பிரபாகரன்,கே.கே.ராஜ்சிற்பி,வி.பழனிவேல்,
எஸ்.ராமச்சந்திரன்,பிரிமுஸ்தாஸ்,வீ.சரவணன்

ஆகிய 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேனாண்டாள் முரளி அணி சார்பாக செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராதாகிருஷ்ணனிடம் ஒரு பேட்டி….

1. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இந்த வெற்றி குறித்த உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..?

நாங்கள் தேர்தல் காலத்தில் மட்டுமின்றி எப்போதும் தயாரிப்பாளர்களுடன் இருந்தோம்.குறிப்பாக கொரோனா காலத்திலும் ஒவ்வொருவரோடும் தொடர்பில் இருந்து தேவையானவற்றைச் செய்தோம். அதனால், இவர்கள் எப்ப்போதும் நமக்காக இருப்பார்கள் என்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நம்பியதால் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வோம்.

2.1303 இல் 1050 ஓட்டுப் பதிவு நடந்திருக்கிறது. இதுபற்றி..?

தயாரிப்பாளர்கள் கடந்த நான்காண்டுகளாகவே நன்றாக இல்லை. அதிலும் தனி அதிகாரி பொறுப்பில் இருந்த ஒன்றரை ஆண்டுகாலம் வழக்கமான செயல்பாடுகள் தவிர மற்ற எதுவும் நடக்கவில்லை என்பதால், நம் சங்கம் இப்படி இருக்கிறதே என்று தயாரிப்பாளர்களுக்கு ஒரு வலி இருந்தது. அதனால் கொரோனா, மழை ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் பெருவாரியாக வந்து வாக்களித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

3.இவற்றில் 250 பேருக்கு மேல் வரவேயில்லை போலியான ஆட்களை வைத்தும் போலி ஓட்டுச்சீட்டுகளை வைத்தும் வாக்குப்பதிவு நடந்ததெனச் சொல்லப்படுகிறதே?

இது தோல்வியடைந்தவர்களின் புலம்பல். ஓட்டுப் போட்டவர்களை அவமதிக்கிற செயல். தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத விரக்தியின் வெளிப்பாடு. தேர்தல் முழுக்க முழுக்க நியாயமாக நடந்தது.

4.டி.ராஜேந்தர் இதுகுறித்துப் புகாரளித்திருக்கிறாரே?

அவர் ஒவ்வொருவரின் ஓட்டுக் கணக்கைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அவர் பெற்ற வாக்குகள் 388. ஆனால் அவர் அணியில் போட்டியிட்ட கே.ராஜன், மனோஜ்குமார் போன்றவர்கள் அவரை விட அதிகமாக ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அடிதடி முருகன் அவரை விட சுமார் முன்னூறு ஓட்டுகள் குறைவாக வாங்கியிருக்கிறார். 
இதிலிருந்து தயாரிப்பாளர்கள், அணி என்று பாராமல் பிடித்தவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.  

5. தேர்தல் நாளன்றே வாக்காளர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்டதாமே?

நாங்கள் பணம் கொடுக்கமாட்டோம் பாட்டுப் பாடுவோம் என்று சொல்லி தேர்தல் பாடல் வெளியிட்டார் டி.ராஜேந்தர். ஆனால், திநகர் க்ளப்பில் கூட்டம் போட்டு ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தது யார்?. இந்தி பிரசார சபா தெருவில் உள்ள அலுவலகத்தில் வைத்து பத்தாயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்தது யார்?, போஸ் அலுவலகத்தில் வைத்து செல்போன் கொடுத்தது யார்?, தங்கக்காசு கொடுத்தது யார்? இப்படி எல்லாவற்றையும் செய்தது அவர்கள்தாம்.

6.உங்கள் அணி சார்பில் எதுவும் கொடுக்கப்படவில்லையா?

நாங்கள் எங்கள் கைப்பட எதுவும் கொடுக்கவில்லை.வென்றால் நல்லது செய்வோம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தோம். 

7.வெற்றி பெற்றவுடனே இவ்வளவு குற்றச்சாட்டுகள், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாட்டில் ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆறுமாதங்கள் அவர்கள் செயல் எப்படி இருக்கிறது என்று பார்ப்பார்கள் அதுவரை எந்த விமர்சனங்களும் வைக்கமாட்டார்கள் என்பது மரபு. இங்கு நாங்கள் செயல்படவே தொடங்காத போது விமர்சிக்கிறார்கள் என்றால் அது காழ்ப்புணர்ச்சி மட்டும்தான்.

8.முன்னாள் தலைவர்கள் கலைப்புலி தாணு. விஷால் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாக்களிக்கவில்லையே?

அவர்கள் வரக்கூடாது என்று இருந்திருக்க வாய்ப்பில்லை. கொரோனா காலம், உடல்நிலை, மருத்துவர்கள் அறிவுரை ஆகிய காரணங்களால் வராமல் இருந்திருக்கலாம். தேர்தல் முடிவுகள் வந்த பின்பு தாணு சார் போனில் வாழ்த்து சொன்னார்.

 9. உங்கள் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும்.?

நாங்கள் மார்ச் மாதமே தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்டோம். அதில் உள்ளவற்றைச் செயல்படுத்துவோம்.

10.நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களை இங்கிருந்து நீக்கப்போவதாகச் சொல்லப்படுகிறதே?

அப்ப்டி எந்த எண்ணமும் இல்லை. இது தாய் சங்கம். இது செயல்படாத நிலையில் அவர்கள் புது அமைப்பை உருவாக்கினார்கள். இப்போது நாங்கள் தாய்மையுடன் அவர்களோடு பேசி ஒன்றாக இணைவோம்.

– அ.தமிழன்பன்

Related Posts