October 18, 2026
விமர்சனம்

அல்டி – திரைப்பட விமர்சனம்

கைபேசித் திருட்டில் ஈடுபடும் மூன்று பேர் அவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேறொரு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அது என்ன சிக்கல்? அதிலிருந்து இவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லுகிற படம்தான் அல்டி.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகி மனிஷாஜித்தோடு காதல்பாடல் பாடுவதால் இவர் நாயகன். மற்றபடி அவருக்கு முக்கியத்துவம் இல்லை.அந்தப்பாடல் இல்லையென்றால் நாயகிக்கும் வேலையில்லை.

நாயகனின் நணபர்களாக வருகிற சென்ராயன் மற்றும் யாசிப்  ஆகிய இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் மாரிமுத்து நன்றாக நடித்திருக்கிறார். தலைமைக்காவலர் பசங்க சிவக்குமாருக்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.சரியாகச் செய்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் நடன இயக்குநர் ராபர்ட்தான் நாயகன் போல் வருகிறார். கொடுத்த வேடத்துக்கு மிக நியாயமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து நடிக்கலாம்.

ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.

முதல்பாதியில் நண்பர்கள் கூத்தடிப்பதோடு கைபேசித் திருட்டுகள் எப்படி நடக்கின்றன? திருடப்பட்ட கைபேசிகள் எங்குபோய் எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருக்கிறார்கள்.

இரண்டாம்பாதியில் இரண்டு அதிகார வர்க்கங்களுக்குள்ளான மோதலில் சாமானியர்கள் சிக்கிச் சின்னாபின்னமாவதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநர் ஹுசைனுக்கு இது முதல்படம். முதல்படத்திலேயே கவனம் ஈர்த்திருகிறார்.

Related Posts