விமர்சனம்

காதம்பரி – திரைப்பட விமர்சனம்

நாயகன் அருள் மற்றும் அவரது நண்பர்கள் ஆவணப்படமொன்றின் படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். அப்போது,
அவர்கள் செல்லும் மகிழுந்து விபத்துக்குள்ளாகிறது. நடுக்காட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில்
இருக்கும் வீடொன்றில் அடைக்கலம் தேடிச்செல்கிறார்கள்.

அந்த வீட்டில் வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருக்கின்றன.அதோடு அந்தவீட்டின் பாதாள அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தச் சிறுமியைக் காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதில் இருந்து தப்பினார்களா? அந்தச் சிறுமி யார்? சிறுமியைப் பெரியவர் அடைத்து வைத்தது எதனால்? போன்ற
கேள்விகளுக்கான விடை தான் படம்.

நாயகனாக நடித்திருக்கும் அருள், அவரது காதலியாக நடித்திருக்கும் காஷிமா ரஃபி, தங்கையாக நடித்திருக்கும் அகிலா நாராயணன்,
அகிலாவின் காதலனாக நடித்திருக்கும் சர்ஜுன், மற்றொரு தோழியான நின்மி ஆகியோர் புதிய முகங்களாக இருந்தாலும் தமக்கான வேடத்தை உணர்ந்து நடிக்க முயன்றிருக்கிறார்கள்.

அனாமிகா வேடத்தில் நடித்திருக்கும் சிறுமி பூஷிதா, பேச முடியாதவர் வேடத்தில் நடித்திருக்கும் மகாராஜன்,காவல்துறை அதிகாரியாக
நடித்திருக்கும் முருகானந்தம் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

வி.டி.கே.உதயனின் ஒளிப்பதிவு திகில் படங்களுக்குரிய வகையில் இருக்கிறது.

படத்தின் இறுதியில வரும் பாடல் இதம். பின்னணி இசை மூலம் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரித்வி.

படத்தில் நாயகனாக நடித்ததோடு படத்தை இயக்கியிருப்பதும் அருள் தான்.பேய்க்கதை என்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். படத்தைப் பார்ப்போர் தொடக்கத்திலிருந்து இறுதிவரை திக் திக் கெனவே இருக்கவேண்டும் என நினைத்திருக்கிறார். கதைக்களத்தில் காதல் மற்றும் காம உணர்வுகளைக் காட்டக்கூடிய வாய்ப்பு இருந்தும் கவனத்தைச் சிதறவிடாமல் நேர்க்கோட்டில் பயணம் செய்திருக்கிறார். பயணம் மெதுவாக இருந்தாலும் பயமாக இருக்கிறது.

Related Posts