வேழம் – திரைப்பட விமர்சனம்
ஊட்டியில் ஒரு சைக்கோ கொலைகாரனால் தொடர்கொலைகள் நடக்கின்றன. அவற்றில் நாயகன் அசோக்செல்வன் கண்முன்னேயே நாயகி ஐஸ்வர்யாமேனன் கொலை செய்யப்படுகிறார். அதனால் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன் அசோக்செல்வனுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையைச் செய்தது யார்? என்கிற துப்பு கிடைக்கிறது.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் படம்.
ஐஸ்வர்யாமேனனின் காதலராக மீசையில்லாமல் இருக்கும் அசோக்செல்வன் அதன்பின் அடர்ந்த தாடி மீசையுடன் அதிரடி காட்டும் அசோக்செல்வன் ஆகிய இரண்டுவித தோற்றங்களில் நடித்திருக்கிறார்.
இரண்டுக்கும் நல்ல வித்தியாசம் காட்டவேண்டும் என்கிற முனைப்புடன் இருப்பது தெரிகிறது.
ஐஸ்வர்யாமேனன் அழகாக இருக்கிறார். காதல்காட்சிகளில் இயல்பான நெருக்கம் காட்டுகிறார். அவருக்கு ஏற்படும் நெருக்கடிகள் அதிர்ச்சி தருபவை.
இன்னொரு நாயகியாக ஜனனி. நாயகனுக்கு உத்வேகம் கொடுத்து அவரைக் கரையேற்றும் வேடம். அதைப் பொறுப்புடன் செய்திருக்கிறார்.
முக்கிய வேடங்களில் கிட்டி, சங்கிலிமுருகன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்,கலை இயக்குநர் கிரண், ஷியாம் சுந்தர், மாரத்திய நடிகர் மோகன் அகாஷே ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களில் காவல் அதிகாரியாக வரும் மோகன் அகாஷே, யார் இவர்? எனக்கேட்க வைத்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
சக்தி அரவிந்த் ஒளிப்பதிவில் ஊட்டியின் இயற்கை அழகுகளும் நாயகன் நாயகிகளும் செழிப்பாக இருக்கிறார்கள்.
ஜானு சந்தர் இசையில் காதல் பாடல்கள் மென்மை. பின்னணி இசை அளவு.
படத்தொகுப்பு செய்துள்ள பிரசாத்,படம் வேகமாகச் செல்ல உதவியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சந்தீப் ஷ்யாம். கொலையில் தொடங்கும் படம் அழகான காதல் படமாகி அதன்பின் மெதுவாக துப்பறியும் வகைக்கு மாறுகிறது. இவை எல்லாமே இயல்பான போக்கில் அமைந்திருப்பதும் சுவாரசியமாக இருப்பதும் இயக்குநரின் பலத்தைக் காட்டுகிறது.
வேழம் அசோக்செல்வனுக்குப் பலம்.