சினிமா செய்திகள்

173 ஆவது படத்தில் ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறார் ரஜினி?

ரஜினி 173 படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு முதலில் சுந்தர்சியும் அதன்பின் சிபிச்சக்ரவர்த்தியும் இயக்குநர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இவர்கள் இருவருமே இல்லாமல் இப்போது இந்தப்படத்தை அஸ்வத்மாரிமுத்து இயக்குகிறார்.இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கத் திட்டமிட்டு வேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில்,இப்படத்துக்காக அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப்பணி நிறைவடைவதற்குள் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டு இயக்குநர் குழு தயாராகிவிடும் என்று சொல்லப்பட்டது.

எல்லாப்பணிகளும் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதால் இம்மாத இறுதியிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும்விதமாக அண்மையில் மிக இரகசியமாக,இப்படத்துக்கான ஒரு புகைப்படப் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

வெளியில் எங்கு இதை நடத்தினாலும் தெரிந்துவிடும் என்பதால்,ராஜ்கமல் அலுவலகத்திலேயே அது நடந்திருக்கிறது.

அதில் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார்.படத்தில் அவர் ஏற்கும் வேடத்தை மையப்படுத்தியே புகைப்படங்கள் எடுக்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது.

முன்னணி புகைப்படக் கலைஞரான ஜி.வெங்கட்ராம்,ரஜினியை வைத்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

இதன்மூலம்,இப்படத்தில் ரஜினி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? என்கிற தகவல் கசிந்துள்ளது.

இப்படத்தில் ரஜினி,மருத்துவராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதற்குத்தக்க ரஜினியின் கழுத்தில் இதயத்துடிப்பு மானியை (ஸ்டெதஸ்கோப்) போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அந்தப் புகைப்படங்களில் ரஜினியின் தோற்றம் மிகவும் ஈர்க்கத்தக்கனதாகவும் இரசிக்கத் தக்கனதாகவும் அமைந்திருக்கின்றன என்று அதைப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதற்காகவே புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.

ரஜினி,இதுவரை முழுநீள மருத்துவர் கதாபாத்திரம் ஏற்று நடித்ததில்லை,சந்திரமுகி உள்ளிட்டு ஓரிரு படங்களில் மருத்துவர் என்று அழைக்கப்படும் வேடங்களில் நடித்திருக்கிறார்.சந்திரமுகியில் அவர் மனநல மருத்துவர் வேடமேற்றிருந்தார்.

இப்போது முதன்முறையாக முழுநீள மருத்துவர் வேடம் ஏற்கிறார் என்றும்,அது சென்னையில் வாழ்ந்து மறைந்த ஐந்து ரூபாய் டாக்டர் என அனைவராலும் அழைக்கப்பட்டவரின் கதையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

குறைந்த கட்டணம் வாங்கி நிறைந்த சிகிச்சை அளித்து வெகுமக்களால் மனமாரப் பாராட்டப் பெற்ற சில மருத்துவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது,அவை ரஜினியின் நட்சத்திரத் தகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts