September 11, 2026
சினிமா செய்திகள்

ஜெயம்ரவிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு

நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில்,ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி,சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம்ரவிக்கு எதிராக, ஏப்ரல் 2025 முதல் தனது குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என புதியமனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதையடுத்து,சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,ஆர்த்தி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், குடும்பநல நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவைக் நீட்டிக்க வேண்டும் என்று ஜெயம்ரவி நேற்று புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஆர்த்தி சார்பில் மூத்தவழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி அப்துல்குத்தூஸ் மனுவை தள்ளுபடி செய்து குடும்பநல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தள்ளுபடி ஆனதன் மூலம்,ஜெயம்ரவியின் சட்டப்போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

நீதிமன்றத்தில் ஜெயம்ரவிக்குப் பின்னடைவு ஏற்பட்ட இந்தச் செய்தி வெளியான பின்பு,சமூகவலைதளங்களிலும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பேசிவருகின்றனர்.

குழந்தைகளின் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படை விசயங்களில் ஜெயம்ரவி இவ்வளவு பிடிவாதம் காட்டக்கூடாது,இடைக்கால ஜீவனாம்சம் என்பது அவருடைய வாரிசுகள் நலனுக்கானதுதானே? அதை உணராமல் அதற்கு எதிராக அவர் வாதிடலாமா? இவ்வாறு சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Related Posts