September 5, 2026
விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்

அம்மா இல்லை அப்பா சரியில்லை என்பதால் தாந்தோன்றித்தனமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ஆண்டனி,ஒருமுறை பாலியல்தொழிலாளியை வீட்டுக்கு அழைத்துவருகிறார்.அவர் வைக்கு ஒரு நிபந்தனை காரணமாக அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கிறது.அதன்விளைவு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.அந்தநேரத்தில் பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அதன்பின் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் ஆண்டனி.எல்லாமே அவர்தான் என்பதால் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிக்க முயன்றிருக்கிறார்.சில இடங்களில் சரியாகவும் சில இடங்களில் பிழையாகவும் இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் மதுமிதாதாஸ் வங்காளப் பெண் வேடமேற்றிருக்கிறார்.அதனால் வங்காளம் ஆங்கிலம் தமிழ் என பலமொழிகளில் பேசுகிறார்.எந்த மொழித்தடையும் இல்லாத மெல்லிய உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ரெஜின்ரோஸ்,ஆலம்ஷா,நவ்யா சுஜி,மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் ஆகியோருக்கு சும்மா வந்துபோகிற கதாபாத்திரங்கள் இல்லை.திரைக்கதையைத் திருப்பிப்போடுகிற கதாபாத்திரங்கள்.அதற்கேற்ப அவர்களும் நடித்திருக்கிறார்கள்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ஜீவாரவியும் கவனிக்க வைத்திருக்கிறார்.

பியட்ரோவில்லானியின் ஒளிப்பதிவு அழகிய காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்திருப்பதோடு கதை சொல்ல வரும் உணர்வுகளையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோர் இசையில் கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி ஆகியோரின் எழுத்தில் வந்திருக்கும் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம்.ஜோயி ரிடாவின் பின்னணி இசை படத்துக்கு இதம் சேர்த்திருக்கிறது.

சமுதாயத்தின் பொதுபுத்திக்கு எதிரான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை அனைவரும் இரசிக்கும் வகையில் கொடுத்துவிடவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.அதேநேரம் பொதுப்புத்தியில் பாலியல் தொழிலாளிகளை அணுகும்போக்கும் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணமாகாத இருவர் திருமணம் செய்வதா? எனும் கேள்வியையும் சிக்கலுக்குரிய மையக்காரணம் என்று வைத்திருக்கிறார்.இதனால் இவ்விரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு திரைக்கதை தத்தளிக்கிறது.

முத்தத்தை நிபந்தனையாக வைத்திருப்பது மூலப்படமெடுத்த உலகத்தில் சாதாரணமாக இருக்கலாம்,இங்கே வேறு எதையாவது நிபந்தனையாக வைத்திருந்திருக்கலாம்.திரைக்கதையில் பல விசயங்களை இந்திய மயமாக்கிய இயக்குநர்,இந்த விசயத்தை மட்டும் அப்படியே வைத்துவிட்டார்.அது குற்றமில்லை.அதே தன்மையோடு மொத்தத் திரைக்கதையையும் அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

– முருகன்

Related Posts