September 4, 2026
விமர்சனம்

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

வழக்கமான காதல்கதைகளில் காதலரும் காதலியும் சமவயது அல்லது கொஞ்சம் முன்பினே இருப்பார்கள்.இந்தக் காதல்கதையில் காதலனுக்கும் காதலிக்கும் வயதுவித்தியாசம் அதிகம்.காதலுக்கு எதிராக அதுவே அமைகிறது.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

காதல்தோல்வி கண்ட மத்தியவயதினரான நாயகன் நிவின்பாலி வீட்டருகே புதிதாகக் குடியேறுகிறார் நாயகி மமிதா பைஜு.பொறுப்பற்ற குடிகார அப்பாவால் துன்பங்களை எதிர்கொள்ளும் அவர் பொறுப்பான அன்பான ஆளுமையான ஆண்மகனான நிவின்பாலி குறித்து அறிந்ததும் காதல் கொள்கிறார்.முதலில்,நிவின் ஏற்கமறுக்கிறார்.பின்பு ஏற்கிறார்.ஆனால் உலகம் எதிர்க்கிறது.அதன்பின் என்னவானது? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

மத்தியதர வயதினராக நடித்திருக்கும் நிவின்பாலி,அதற்குத்தக்க உடல்மொழியையும் வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்.அவருடைய பிம்பத்துக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் அநாயசமாக நடித்திருக்கிறார்.காதலால் வெட்கப்படும் காட்சிகளில் பெண்களை ஈர்க்கிறார்.

உள்ளுக்குள் தீராத துயரம் இருப்பினும் வெளியில் சுட்டித்தனம் காட்டும் கல்லூரிமாணவியாக நடித்திருக்கும் மமிதா பைஜு.இந்த வேடத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியாது என்கிற பெயரெடுத்திருக்கிறார்.

சங்கீத் பிரதாப்,பிந்து பணிக்கர்,சுரேஷ் கிருஷ்ணா,வினய் ஃபோர்ட்,ஸ்ரிந்தா,ஷமீர் கான்,மீனாட்சி ரவீந்திரன்,அயசங்கர் கரிமுட்டம்,
தங்கம் மோகன்,வெட்டுக்கிளி பிரகாஷ் ஆகிய மற்ற நடிகர்கள் அனைவருமே திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும் கதாபாத்திரங்களை ஏற்று அவற்றில் சரியாகவும் நடித்திருக்கிறார்கள்.

பெத்லகேம் குடும்ப யூனிட் என்பது ஒரு தேவாலயத்தைச் சுற்றி வசிக்கும் குடும்பங்களைக் குறிப்பதாம்.அதை காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு.காதல் காட்சிகளில் இனிமை சேர்த்திருக்கிறார்.

விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் இதம்,பின்னணி இசையில் காதல் உணர்வுகளை மேம்படுத்தியிருக்கிறார்.இயக்குநர் சொல்ல நினைத்த பல நெகிழ்வுகளை இசையால் மொழிபெயர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பு செய்திருக்கும் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்,இந்தக் கதையை இப்படிச் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்துச் செய்திருக்கிறார்.சரியாக இருக்கிறது.

கிரண் ஜோசியோடு இணைந்து கதை திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ்.ஏடி.

வயது வித்தியாசம் அதிகமுள்ளோருக்கிடையேயான காதல்,அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம்,இந்தச் சமுதாயம்,அந்தக் காதல் இணையரைப் பார்க்கிற பார்வை ஆகிய எல்லாவற்றையும் அளவாகக் கலந்து கலகலப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்.நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் எனும் சொலவடையைக் காட்சிகளாக்கியிருப்பது படத்துக்கு வலுச்சேர்த்து இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.

– இளவரசன்

Related Posts