September 1, 2026
சினிமா செய்திகள்

மகுடம் பட கடைசிநேர நெருக்கடி தந்த பலன் – விஷால் நடிக்கும் புதியபடம்

ஜூலை 24 அன்று நடிகர் முதன்முறையாக விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படம் வெளியானது.அந்தப்பட வெளியீட்டின்போது அவருக்குக் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.அந்த கடைசிநேரத்தில் அந்தப்படம் வெளியாக சுமார் ஏழுகோடி ரூபாய் கொடுத்து உதவினார் தயாரிப்பாளர் லலித்குமார்.அதனால்,அவருக்கு ஒருபடம் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் விஷால்.

இப்போது விஷால்,சுந்தர்.சி இயக்கும் புருஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அந்தப்படத்தின் வேலைகள் நிறைவடைந்ததும் லலித்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார் விஷால்.

அந்தப்படத்துக்கு இயக்குநர் யார்? என்கிற கேள்வி வந்தபோது,இரண்டாண்டுகளுக்கு முன்பாக விஷால் கேட்டிருந்த ஒரு கதையைப் படமாக்கலாம் என்று சொன்னாராம்.

அப்போது அவரிடம் கதை சொன்னவர் இயக்குநர் துரை.செந்தில்குமார்.எதிர்நீச்சல்,கொடி,கருடன்,லீடர் உட்பட பல படங்களை இயக்கியவர்.

அவர் லீடர் படத்துக்கு அடுத்து இயக்கும்வகையில் அந்தக்கதையை விஷாலுக்குச் சொல்லியிருக்கிறார்.விஷாலுக்கு அந்தக்கதை பிடித்ததால் அப்போதே படம் செய்யலாம் என்று ஒப்புக்கொண்டாராம்.ஆனால்,சில காரணங்களால் அந்தப்படம் நடக்கவில்லை.

இப்போது மகுடம் படச்சிக்கலின்போது கடைசிநேரத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் செய்த உதவிக்காக அந்தப்படம் நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.

புருஷன் படத்தின் வேலைகள் நிறைவடைந்ததும் லலித்குமார் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

விஷால்,நடிப்பில் வெளியான மகுடம் படமே,தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி,நிதியாளர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் விஷால் பெற்றிருந்த கடனால்தான் உருவானது என்று சொல்லப்பட்டது.

அவர்களிடம் விஷால் பெற்றிருந்த கடனைத் திருப்பிக் கேட்டபோது,விஷாலால் கொடுக்க இயலவில்லை.ஏனெனில் அவர் எந்தப்படமும் நடிக்கவில்லை.அதனால்,உங்களுக்கு என்னால் பணமாகத் திருப்பிக் கொடுக்க முடியாது.நீங்கள் படம் தயாரியுங்கள் நடித்துக் கொடுக்கிறேன் என்று விஷால் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே அந்தப்படம் திட்டமிடப்பட்டது என்று சொன்னார்கள்.மகுடம் படத்தை முதல்பிரதி அடிப்படையில் விஷாலே தயாரிப்பது என்றும் அப்பட வியாபாரத்தின்போது அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்றும் பேச்சு.

ஆனால்,அந்தப்படத்தின் முடிவு தலைகீழாகிவிட்டது.அதனால் இப்போது,அந்தக்கடனின் நிலை என்ன என்பதே கேள்விகுறியாக இருக்கிறது.

இந்நிலையில்,மகுடம் படத்துக்காக வாங்கிய கடனுக்காக இன்னொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஷால்.இதனுடைய இலாப நட்டங்கள் தயாரிப்பாளரையே சாரும் என்பதால் விஷால் நடிகராக மட்டும் இருப்பார் என்றும் அப்படத்தின் முழுப்பொறுப்பும் தயாரிப்பாளர் லலித்குமாரையே சேரும் என்ரும் சொல்கிறார்கள்.இதனால் அவருக்கு ஏன் இந்த வேலை? என்றும் சிலர் பேசுகிறார்கள்.

படம் ஓடிவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்கிற நம்பிக்கையே அனைவரையும் இயக்குகிறது.அவர்கள் எண்ணம் ஈடேறட்டும்.

Related Posts