ரஜினியின் அடுத்தபட இயக்குநர் மற்றும் 3 தயாரிப்பாளர்கள் – விவரம்
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் என்றும் அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமும் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன என்றும் கூறப்பட்டது.
ஆனால், ஜெயிலர் 2 முடிந்ததும் அந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிற மாதிரி லோகேஷ் கனகராஜ் தயாராகவில்லை.அவர் ஒரு மையக்கதையைச் சொல்லி கமல்,ரஜினி ஆகிய இருவரிடமும் ஒப்புதல் பெற்றிருக்கிறார்.அதற்கு முழுமையான திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.அந்தப் பணி முடிவடைந்து அந்த திரைக்கதை கமல் ரஜினி ஆகிய இருவருக்கும் முழுத் திருப்தியாக இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு தொடங்கும் என்கிற நிலையில் இருக்கிறது.
இதற்கு சில மாதங்கள் ஆகலாம். எனவே அதற்கு முன்னால் ஒரு படம் நடித்துவிடுவது என்கிற முடிவை ரஜினிகாந்த் எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.இவர் ஏற்கெனவே ரஜினியை வைத்து அருணாச்சலம் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார்.அந்தப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியவிருக்கிறார்கள்.
இப்படம் தொடர்பான தொடக்கக் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.ஒரு பக்கம் திரைக்கதையை இறுதி செய்யும் பணிகள் இன்னொரு பக்கம் நடிகர் நடிகையர் தேர்வு என பரபரப்பாக இருக்கிறார்களாம்.
இந்தப் படத்தைத் தயாரிக்க ஒன்றுக்கு மூன்று நிறுவனங்கள் இணைந்திருக்கின்றனவாம்.
ஐசரிகணேசின் வேல்ஸ் நிறுவனம், ஏ.சி.சண்முகத்தின் நிறுவனம் ஆகிய நிறுவனங்களோடு ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் ஒரு பங்குதாரராக இணைந்திருக்கிறாராம்.
இந்தக் கூட்டணி அமைந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறதாம். வேல்ஸ் நிறுவனம் ரஜினியை வைத்துப் படம் தயாரிக்கவேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்தது.அதை ரஜினி ஏற்றுக்கொண்டதால் அந்நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இயக்குநர் சுந்தர்.சி இப்போது,ஏ.சி.சண்முகம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் எனவே அவர் சார்பில் அந்நிறுவனம் இணைந்திருக்கிறது.
மூன்றாவதாக நடிகர் ரஜினியின் கடமைக்காக ஐஸ்வர்யாவை இதில் பங்குதாரராக இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இப்படத்தில் ஓர் இலாபம் கிடைத்தால் அது ரஜினி தன் மகளுக்குக் கொடுக்கிற பரிசாக இருக்கும் என்கிறார்கள்.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமென்றும் உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள்.நடக்கட்டும்.











