சினிமா செய்திகள்

எல்ரெட்குமார் தயாரிப்பில் கவுதம் மேனன் நடிப்பது எப்படி? – பின்னணி தகவல்

வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படம் விடுதலை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை அண்மையில் வெளியிட்டனர்.

இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைக் காட்சி இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தச் செய்தி திரையுலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன்?

இப்படத்தைத் தயாரிப்பவர் எல்ரெட்குமார்.

இவருடைய தயாரிப்பில் நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்கினார் கவுதம் மேனன்.

அப்பட வெளியீட்டுக்குப் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவுதம் மேனன் எலரெட் குமார் ஆகிய இருவருமே ஒருவர் மீது ஒருவர் கொலைவெறியில் இருந்தனர்.

தனிப்பட்ட பஞ்சாயத்து, நீதிமன்றத்தில் வழக்கு என சில ஆண்டுகள் ஓடின.

இதனால்தான் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தில் கவுதம் நடிப்பதில் எல்லோருக்கும் வியப்பு.

எப்படி நடந்தது?

கவுதம் மேனன் நடித்தில் நன்றாக இருக்கும் என நினைத்து வெற்றிமாறன் அவரை அணுகியபோது, எல்ரெட்குமார் பற்றி வருத்தமாய்ப் பேசி மறுத்திருக்கிறார்.

அதற்கு, அவர்தான் தயாரிப்பாளர் என்றாலும் இப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் நான்தான் தயாரிக்கிறேன். அதனால் அவருக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நம்பி வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் கவுதம் மேனன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.

Related Posts