சினிமா செய்திகள்

சித்ரா தற்கொலை விவகாரம் – காவல்துறைக்குக் கோரிக்கை

மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சித்ரா.இவருக்கு வயது 29.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் அதிக இரசிகர்களையும் பெற்றார்.

ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சித்ராவுக்கும் ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இவர், ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியிலிருந்து நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு அதிகாலை 2.30 மணியளவில் விடுதி அறைக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த்துடன் சித்ரா ஒன்றாகத் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாகக் கூறி அறைக்கு வெளியே செல்லச் சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவைத் தட்டியதாகவும் அறைக்கதவை சித்ரா திறக்கவில்லை என்றும் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் விடுதி நிர்வாகம், மாற்றுச் சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

இது குறித்து நசரத் பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சித்ராவோடு அறையில் தங்கியிருந்த ஹேமந்த்தோடு பிப்ரவரியில் திருமணம் நடக்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், சில வாரங்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதிவுத் திருமணம் நடந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மரணமடைந்த நிலையில் அவருடைய புகைப்படம் வெளியாகி பலத்த அதிர்வுகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் கவிதாபாரதி வெளியிட்டுள்ள பதிவில்…

தற்கொலை என்கிறார்கள்..ஆனால் கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளங்களில்லை.. முகத்தில் ரத்தக்காயங்கள் தெரிகின்றன.

எங்கள் துறை சார்ந்தவர் என்று வகையிலும், ஒரு ஊடகக்காரன் என்னும் உரிமையிலும் கோரிக்கை விடுக்கிறேன்-
காவல்துறையினர் எல்லாக் கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.

சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் சொல்லியிருக்கிறார்.

அவர் மட்டுமின்றி இன்னும் பலரும் இதே கருத்தைச் சொல்லிவருகின்றனர்.

Related Posts