கும்கி 2 படத்துக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் நாயகியாக, ஸ்ரீதா ராவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரித்திருக்கும் இந்தப்படத்தை இம்மாதம் வெளியிடத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியிருந்தார்கள்.
அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.அப்போது பேசிய இயக்குநர் பிரபுசாலமன்,இப்படத்தை 2018 இல் தொடங்கி, 2019 இல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டுக் காட்டினோம். ஆனால் 2020-2021 இல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.
முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன்பிறகு 2023 ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கினோம்.
எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்கவேண்டும்.அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது.
தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார் என்று பேசியிருந்தார்.
இவ்வளவு ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாவதில் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில்,இன்று அப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.
எதனால்?
பிரபல திரைப்பட நிதியாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்,சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கும்கி 2 படத்தைத் தயாரிக்க 2018 ஆம் ஆண்டு ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் பெற்ற பிரபு சாலமன், கும்கி 2 படம் வெளியீட்டுக்கு முன்பு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பித் தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 இலட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நவம்பர் 14 ஆம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ஒப்பந்ததை மீறி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதனால், மனுதாரருக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இப்படத்தை மும்பையைச் சேர்ந்த ஜெயந்திலால் காடா தயாரித்திருக்கிறார்.அவருக்குத் தெரியாமலே இப்படத்திற்காக சென்னையில் இருக்கும் சந்திரபிரகாஷ் ஜெயினிடம் கடன் பெற்றிருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன்.அந்த விசயம் தயாரிப்பாளருக்குத் தெரியாது என்று சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் படத்தை வெளியிடும் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறார்கள்.அப்போதும், சென்னையில் வாங்கிய கடனுக்கு எந்தப்பதிலும் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்.சந்திரபிரகாஷ் ஜெயின் பலமுறை தொடர்பு கொண்டும்,இயக்குநர் பிரபுசாலமன் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார் என்று சொல்லப்படுகிறது. இதனால் நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு பெற்றிருக்கிறார்.
– சுந்தர்











