டிசம்பர் 10 தொடங்குகிறது சிகாவின் அடுத்த படம் – விவரங்கள்
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. 2026 தைப் பொங்கலையொட்டி சனவரி 14 ஆம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. எனினும், டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம் மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் அவர் நடிக்கவிருக்கிறார்.
இவ்விரு படங்களில் டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வெங்கட்பிரபு படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கவிருக்கின்றன.
இவற்றில் எந்தப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும்? என்பதில் மாறுபட்ட தகவல்கள் சொல்லப்பட்டுவந்தன.
இப்போது அதில் தெளிவு கிடைத்துவிட்டது என்கிறார்கள்.
முதலில் சிபிச்சக்ரவர்த்தி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.அந்தப்படத்தை முடித்துவிட்டுத்தான் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என்று சொல்கிறார்கள்.
சிபிச்சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிக்க தொடக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசியிருந்தனர்.அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்பட்டது.அதன்பின் ஒரு பெரிய இடைவெளி.இயக்குநர் மாற்றம் உள்ளிட்ட பல குழப்பங்கள் நடந்தன.அவையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, இப்போது மீண்டும் தொடங்கும் நேரத்தில் ராஷ்மிகா மந்தனாவின் தேதிகள் கிடைக்கவில்லையாம்.
அதனால், தெலுங்கிலிருந்தே இன்னொரு நாயகியைத் தேடியிருக்கிறார்கள்.கடைசியில் ஸ்ரீலீலாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.அவர் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு இணையராக நடித்திருக்கிறார்.பராசக்திக்கு அடுத்த படத்திலும் அவரே இணைகிறார்.
இதற்கு முன், டான் படத்திலும், அதற்கு முந்தைய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரியங்கா மோகன் இணைந்து நடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தமாதமே அதாவது நவம்பர் மாதம் தொடங்கும் என்று முதலில் சொல்லப்பட்டது.ஆனால் நடிகர் நடிகைகள் தேதி உள்ளிட்ட சில காரணங்களால் திட்டமிட்டபடி தொடங்க இயலவில்லை.இப்போது எல்லாம் சரியாக அமைந்துவிட்டனவாம்.
அதனால்,இப்போது டிசம்பர் 10 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.அதற்கேற்பத் திட்டமிட்டு வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.முதல்கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் இறுதிவரை நடக்கும் என்றும் அதன்பின் ஒரு இடைவெளிவிட்டு பொங்கலுக்குப் பிறகு தொடர்ந்து நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.











