மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய்சேதுபதி – புதிய தகவல்கள்
இயக்குநர் மகிழ்திருமேனி அஜீத்தை வைத்து எடுத்த விடாமுயற்சி படம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.அதன்பின் அவருடைய அடுத்தபடம் பற்றி எந்தப் பேச்சும் இல்லை.
ஒருபடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இரண்டு மூன்றாண்டுகள் இடைவெளி என்பது இயக்குநர் மகிழ்திருமேனியின் வழக்கம்.அவர் இயக்குநராக அறிமுகமானது 2010 ஆண்டு. இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். அதனால் அடுத்தடுத்த படங்களுக்குப் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்வார் என்பதாலும் விடாமுயற்சி வெற்றி பெறவில்லை என்பதாலும் அவருடைய அடுத்தபடம் பற்றி பொதுவெளியில் எந்தத் தகவலும் இல்லை.
தகவல் இல்லையென்பதால் அவர் சும்மா இருக்கிறார் என்று பொருளில்லை.தன்னுடைய அடுத்தபடம் தொடர்பான வேலைகளில் அவர் தீவிரமாக இருக்கிறாராம்.
அவர் அடுத்தபடத்துக்காக ஒரு கதையை எழுதி அதை விஜய்சேதுபதியிடம் சொல்லியிருக்கிறார்.அவர் சொன்னகதை விஜய்சேதுபதிக்குப் பிடித்துவிட்டதாம்.அதனால் இதற்கான முழுமையான திரைக்கதை மற்றும் மற்ற நடிகர் நடிகையர் தேடலில் இறங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து,இக்கதையில் நாயகியாக நடிக்கக் கேட்டு இந்தி நடிகை ஷ்ரதாகபூரை அணுகியிருக்கிறார்.அவரும் கதைகேட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
அதுமட்டுமின்றி, இந்தக்கதையில் இருக்கும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் போயிருக்கிறார்.அவரிடமும் கதை சொல்லி அவருடைய ஒப்புதலும் பெற்றுவிட்டாராம்.
இயக்குநர் கதாநாயகன் நாயகி வில்லன் ஆகிய எல்லாம் தயார் என்றால்,அடுத்த கேள்வி படத்தைத் தயாரிப்பது யார்? என்பதுதான்.
அதற்கும் விடை கிடைத்திருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த மிராக்கிள் மூவிஸ் என்கிற படத்தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடக்கின்றன என்றும் வெற்றிகரமாக முடிவடைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள்.
விஜய்சேதுபதி வரிசையாகப் படங்கள் வைத்திருக்கிறார்.அவருடைய தேதியை ஒட்டி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய்சேதுபதி இந்தியிலும் பரிச்சயமான கதாநாயகன் தான். இந்தப்படத்தில் நாயகி மற்றும் வில்லன் ஆகியோரோடு படத்தைத் தயாரிப்பதும் இந்திப்பட நிறுவனம் என்பதால் இது தயாராகும்போது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நேரடியாக வெளியிடும் வண்ணம் தயாராகவிருக்கிறதென்றும் தெலுங்கு,கன்னடம் ஆகிய மற்ற மொழிகளில் குரல்மாற்று செய்து படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.











