காந்தா – திரைப்பட விமர்சனம்
திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் காந்தா.
1950 களில் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் டி.கே.மகாதேவன் (துல்கர் சல்மான்).அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி).பல ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யத் திட்டமிடுகின்றனர்.அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம்.
சமுத்திரக்கனியின் திரைக்கதையில் பல மாற்றங்களைச் சொல்கிறார் துல்கர் சல்மான்.இதைச் சற்றும் எதிர்பாராத சமுத்திரக்கனி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்.ஆனாலும் படத்தை எடுத்து முடித்தாக வேண்டிய நெருக்கடி காரணமாக சமரசங்களுக்கு ஆளாகிறார்.அதன்பின்னும் எதிர்பாராத சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.
ஏற்கெனவே நடிகையர் திலகம் படத்தில் ஜெமினிகணேசன் வேடமேற்றுச் சிறப்பாக நடித்திருந்த துல்கர் சல்மான், இந்தப்படத்திலும் அந்தக் காலத்துக் கதாநாயகர்களைக் கண்முன்னே நிறுத்தி பாராட்டுப் பெறுகிறார்.அவரது நடை உடை பாவனை ஆகியன இரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
படத்தின் இன்னொரு நாயகனாக இருக்கிறார் சமுத்திரக்கனி. நிஜத்திலேயே இயக்குநரான அவர் இந்தப்படத்தில் ஏற்றிருக்கும் இயக்குநர் கதாபாத்திரத்தை மிக எளிதாகச் செய்திருக்கிறார்.இன்னும் 50 வருடமானாலும் இந்தப்படம் இருக்கும் இப்போ நீ சொல்ற ஆடியன்ஸ் இருக்கமாட்டான் என்று துல்கரிடம் சீறுமிடம் உட்பட எல்லாக் காட்சிகளுமே நன்று.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ்,ஆச்சரிய புதுவரவு.அந்தக்காலத்துக் கதாநாயகிகளைப் பிரதியெடுத்தது போலவே இருக்கிறார்.நடிப்பிலும் வியக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி அந்த வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்.
துல்கரின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி,மாமனாராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி,ரவீந்திர விஜய்,ஆடுகளம் நரேன்,பக்ஸ் மற்றும் உதவி இயக்குநராக நடித்திருக்கும் கஜேஷ்நாகேஷ் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜானுசந்தர், பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.கறுப்பு வெள்ளை காலகட்டம் வண்ணக் காலம் ஆகியனவற்றை அழகாக வேறுபடுத்திக் காட்டி வரவேற்புப் பெறுகிறார்.
கலைஇயக்குநர் ராமலிங்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது.அந்தக்கால படப்பிடிப்பு அரங்குகள் கலைப்பொருட்கள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கிறார்.
செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியிருக்கிறார்.அறிவா? அழகா? இயக்குநரா? நாயகனா? என்று காலங் காலமாக நடக்கும் பட்டிமன்றத்தின் தொடர்ச்சியாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.எம்கேடியின் வாழ்க்கைக் கதை என்கிற சர்ச்சைக்கு வலுச்சேர்க்கிற மாதிரி இதில் நாயகனின் பெயர் டிகேஎம் என்றிருக்கிறது.எல்லாவற்றையும் தாண்டி கவனிக்க வைக்கிற படத்தைக் கொடுத்திருக்கிறார்.
– இளையவன்











