December 6, 2024
விமர்சனம்

அயலான் – திரைப்பட விமர்சனம்

தன் கிராமத்தின் நலனுக்காக சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் எதிர்பாராமல் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியனைச் சந்திக்க நேர்கிறது. அது பூமிக்கு வந்த நோக்கம் அறிந்து அதன்காரணமாக அதனுடன் இணைந்து பயணிக்கிறார்.

ஏலியன் வந்தது எதனால்? இருவரும் இணைந்ததும் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தாம் அயலான்.

சிவகார்த்திகேயன் இரசிகர்கள் அவரிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அவை அத்தனையையும் அட்சரம் பிசகாமல் செய்திருக்கிறார். ஏலியனும் அவரும் இணைந்த பின் நடக்கும் காட்சிகள் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் சுவாரசியத்துக்குக் குறைவில்லை.

நாயகி ரகுல்ப்ரீத்சிங் பாடல்கள் மற்றும் சில காட்சிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார். ஏலியனால் அவர் வாய்ப்பு பறிபோகிறது. இருக்கும் வரை நிறைவு.

கருணாகரன், யோகிபாபு, கோதண்டம் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.

சரதகேல்கர் வில்லன். மனசாட்சியற்ற பன்னாட்டுநிறுவனத்தார் வேடத்துக்குப் பொருந்தியிருக்கிறார். அவருடன் இஷாகோபிகரும் நடித்திருக்கிறார் கூடுதல் கவன ஈர்ப்பு.

பானுப்ரியா, பாலசரவணன், முனிஸ்காந்த் ஆகியோரும் குறைவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வரவேற்புப் பெறுகின்றன. பின்னணி இசை திரைக்கதைக்கு வலுச்சேர்க்கிறது.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

முத்துராஜின் கலை இயக்கம் கதைக்கு இணையாக அமைந்திருக்கிறது.

அறிவியல் புனைவுக் கதை என்பது புரியாமல் போய்விடும் ஆபத்திருக்கிறது. ஆனால் அப்படி நடந்துவிடாமல் அனைவரும் புரிந்து இரசித்து சிரிக்கிற மாதிரி எடுத்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.

படத்தில் இருக்கும் சிற்சில குறைபாடுகளை மறக்க வைக்கிறது, உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உயரிய கருத்தை வலிமையாகப் பேசியிருக்கும் பாங்கு.

அயலான் – சூழலியலாளன்

– தனா

Related Posts