பூமிகா – திரைப்பட விமர்சனம்
“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டேஇருப்பது எம் கடமை”.
என்று களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத்.
சொல்லவந்ததைச் சும்மா சொன்னால் செவியில் ஏறாது என்பதால் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார்.
படம் தொடங்கியவுடன் கர்ப்பிணி மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டே (காரில்) மகிழுந்தில் வருபவரின் கொடும் மரணம் அடிவயிறு கலங்க வைக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கணவர் விது இவர்களின் தோழி சூர்யாகணபதி, நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் மாதுரி ஆகியோர் நீலமலையின் வனத்துக்குள் பயணிக்கும்போது அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்கின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் வேடத்துக்கேற்ப அமைதியாகவும் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். ஆபத்தான நிலைமை என்றாலும் அதன் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட வேடம். அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் விது பொருத்தமாக இருக்கிறார். வசன உச்சரிப்பு மற்றும் முகபாவங்களில் முன்னேற வேண்டும்.
கட்டிடக்கலை நிபுணராக வரும் சூர்யாகணபதி கொள்ளுப்பட்டாசு. படபடவென வெடிக்கிறார்.
விதுவின் தங்கையாக நைத்திருக்கும் மாதுரி, கத்திக் கத்தியே பயப்பட வைத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷைத் தாண்டி கதையின் நாயகியாக பூமிகா இருக்கிறார். பூமிகாவாக நடித்திருக்கும் அவந்திகா அருமை.மரம் வெட்டப்படும்போதும் நிலத்தைப் பிளக்கும்போதும் அவர் துடிக்கும் துடிப்பு ஒவ்வொருவருக்கும் இருந்தால் பூமிக்கு நல்லது.
உதவியாளராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், இயற்கையின் பிரதிநிதியாக இருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், ஏற்ற இறக்கத்தோடு அதை உச்சரித்திருக்கும் பாங்கும் படத்தின் கருத்தை மக்களிடம் சேர்க்கப் பயன்பட்டிருக்கிறது.
பூமிகாவை அழகுபடுத்துவதில் ஒளிப்பதிவுக்கு முதன்மை இடம். பொறுப்புடன் பணிபுரிந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜஸாரா. நீலமலையின் கண்களில் ஒற்றிக்கொள்ளும் அழகையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பின்னணி இசை பயமுறுத்தாத திகில் படம் ஏது? பிருத்வி சந்திரசேகர் பயமுறுத்தியிருக்கிறார்.
ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு அளவாக இருக்கிறது.
திரைக்கதையோட்டத்திலும் காட்சிகளிலும் இருக்கும் குறைகளை மறந்து,பூமி தன்னைப் பார்த்துக்கொள்ளும் நீ உன்னைப் பார்த்துக்கோ என மனித இனத்துக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டுமொத்த உலகுக்காகவும் சிந்தித்திருக்கும் இயக்குநர் ரவீந்திரன் ஆர்.பிரசாத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.
பூமிகா – பூமிடா











