பரிமளா அண்ட் கோ – திரைப்பட விமர்சனம்
அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது.
ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில் சிக்குகிறார்கள்.
உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது யார்? ஏன்? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் பரிமளா அண்ட் கோ.
குடும்பத்தலைவராக நடித்திருக்கும் ஜெயராம், அவர் மனைவியாக நடித்திருக்கும் ஊர்வசி,மகள்களாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் படத்தின் மொத்தக் கதையும் நம்மீதுதான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்து,சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருருக்கிறார்கள்.
அனுபவமிக்க ஜெயராம் ஊர்வசி ஆகியோர் சின்னச் சின்ன அசைவுகளிலும் உணர்வை வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு என்றால் அவர்களுக்கு ஈடுகொடுத்து சஞ்சனாவும் அனந்திகாவும் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் மிஷ்கின்,முக்கிய வேடமேற்றிருக்கும் நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் சரியான தேர்வு. இயக்குநர் எதை நினைத்து அவர்களை நடிக்க வைத்தாரோ அதை செய்து வியக்க வைத்திருக்கிறார்கள்.அவரவர் துறையில் முத்திரை பதித்திருக்கும் அவ்விருவரும் நன்னடிப்பிலும் மிளிர்ந்திருக்கிறார்கள்.
யோகிபாபு,பூர்ணிமாரவி உள்ளிட்டோரும் தாழ்வில்லை.
தயாரிப்பாளர் தமிழ்க்குமரன்,காவல்துறை வேடமேற்றிருக்கிறார்.அவருடைய பாத்திரப்படைப்புற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி நடிகராகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு திரைக்கதையில் இருக்கும் திருப்பங்களைக் காட்சிகளில் மேம்படுத்தி படத்தை இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறார்.
ஃபாக்ஸன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்டு இரசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.பின்னணி இசை நன்று.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் படத்தை வேகப்படுத்தியிருக்கிறார்.
கதைக்களத்துக்கேற்ப கலை இயக்குநர் த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கிறார்.அவருடைய படத்தின் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
ஒரு கொலை,அது தொடர்பான காவல்துறை விசாரணை என்கிற வழக்கமான கதைக்குள் ஒரு நடுத்தரக் குடும்பத்தை வைத்து முற்றிலும் புதியகதை ஆக்கியிருப்பதோடு திகில்,மர்மம் ஆகியனவற்றோடு அளவான நகைச்சுவை சேர்த்துதிரைக்கதையையும் புதுமையாக்கியிருக்கிறார்.
அவருடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையைக் கையிலெடுத்து அதில் தன் வழக்கமான சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்தி அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
குடும்பங்கள் கொண்டாடும் படம்.
– இளையவன்











