விமர்சனம்

ரங்கா – திரைப்பட விமர்சனம்

அரியவகை நோய்களில் ஒன்றான ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள கதாநாயகன் சிபிராஜ். குழம்பவேண்டாம், இந்த நோய் உள்ளவர்கள் கை அவர்கள் நினைப்புக்குக் கட்டுப்படாமல் தன் போக்குக்கு வேலை செய்யும்.

எடுத்துக்காட்டாக, இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் இடத்தில் எதிரில் உள்ளவர் முகத்தில் உங்கள் கை குத்துவிடும். நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.

இதற்குத் தற்காலிகத் தீர்வு, மஞ்சள் வண்ணத்தில் புன்னகைக்கும் பந்து ஒன்றைக் கையில் வைத்துக்கொள்வதுதான்.

ஒரு சந்தர்ப்பத்தில் பந்தை மறந்துவிட்ட சிபியின் கை முன்பின் தெரியாத நிகிலாவிமலின் கையை இறுகப்பிடித்துவிட அதன்விளைவு அவர்களுக்குள் காதல். கல்யாணமும் ஆகிறது.

தேனிலவுக்காக காஷ்மீர் செல்கிறார்கள். அங்கு, உயிருக்கும் உயிருக்கும் மேலான மானத்துக்கும் ஊறுவிளைவிக்கும்  எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்ளவேண்டிய நிலை. 

அப்படி என்ன சிக்கல்? அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதைத் தொய்வின்றிச் சொல்லிச் சென்றிருக்கிறது ரங்கா.

புதியவகை நோய் அதன் தாக்கம் என தொடக்கக் காட்சிகளின் கலகலப்பு, நிகிலாவுடனான காதல் காட்சிகள், அடுத்து வரும் அடுக்கடுக்கான ஆக்‌ஷன் காட்சிகள் ஆகிய அனைத்துக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறார் சிபிராஜ். 

கையின் போக்கைக் கட்டுப்படுத்தவியலாமல் தடுமாறுகிற காட்சிகளில் அவர் காட்டும் முகபாவங்கள் இரசிக்கவைக்கின்றன. 

ஜாடிக்கேற்ற மூடி போல் நிகிலாவிமல் அமைந்திருக்கிறார். காதல், பாசம், கோபம், சோகம்,பயம் ஆகிய அனைத்தையும் கண்கள் மூலமே வெளிப்படுத்தி கவர்கிறார்.

சதீஷ், சாரா, ரேணுகா, மனோபாலா, சாமிநாதன் ஆகியோர் சிரிக்க வைக்கப் பயன்பட்டிருக்கிறார்கள்.
மோனிஷ்ரகேஜா எனும் புதியவர் வில்லனாக வருகிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அர்வியின் ஒளிப்பதிவு காஷ்மீரின் கண்கொள்ளா அழகையும் அதிலே உள்ள ஆபத்துகளையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ராம்ஜீவனின் இசையில் பாடல்கள் தாலாட்டுகின்றன, நீண்ட நாட்களுக்குப் பிறகு இனிமையான மெல்லிசைப்பாடல்கள். பின்னணி இசை படத்தின் பரபரப்பை அதிகரித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் வினோத்.டி.எல், ஒரு சின்ன மையக்கருவை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்.

சண்டை நேரங்களில் நாயகனின் கை என்னவெல்லாம் செய்யுமோ? என்று எதிர்பார்க்க வைத்திருப்பது அவருடைய வெற்றி.

செந்தில் ராஜலட்சுமி தம்பதியரை வைத்து தமிழ்க்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பது,சில காட்சிகளில் வரும் விடுதிப்பணியாளர், ஒரே காட்சியில் வரும் வேலைக்காரர் ஆகியோரை வைத்து தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் மேன்மையைப் பேசியிருக்கிறார்.

சிபிராஜூக்கு ஒரு சிறந்த படம்.

Related Posts