விடாமுயற்சி படப்பிடிப்புக்குத் தேதி தர அஜீத் மறுப்பா? – உண்மை என்ன?
அஜீத் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களும் 2023 சனவரி பொங்கல் நாளையொட்டி வெளியானது. அதன்பின் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகிவிட்டது.அதற்கடுத்து அவர் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஆனால்,துணிவு படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்த்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லை.
விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்தது.இரண்டு மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்புக்கு இப்போது இடைவெளி.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மார்ச் 15 முதல் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
நடுவில் அஜீத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது மற்றும் லைகா நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் ஆகியனவற்றினால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையே இதுவரை இல்லாத வழக்கமாக விடாமுயற்சி படத்துக்கு அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் குட்பேட்அக்லி என்கிற படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதோடு அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இதனால், இப்போது லைகா நிறுவனம் பேசியபடி அஜீத்துக்குச் சம்பளம் தரவில்லை என்பதால் அவர் படப்பிடிப்புக்குத் தேதி தராமல் இருக்கிறார் என்றொரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.
வழக்கமாக அஜீத்துக்குப் பேசப்படும் சம்பளம் பல தவணைகளாகப் பெறப்படும். முன் தொகை எவ்வளவு? அடுத்த தொகை எவ்வளவு? எப்போது? என்கிற விவரங்களையெல்லாம் தெளிவாகப் பேசிவிடுவார் அஜீத்.சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் நடந்து கொண்டால் அவரும் சரியாக நடந்துகொள்வார் இல்லையென்றால் சிக்கல்தான் என்பார்கள்.
இப்போதும் அப்படியொரு சிக்கலில் விடாமுயற்சி படம் சிக்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சொன்னபடி அடுத்தடுத்த தவணைகளைக் கொடுக்காததால் அவர் தேதி தரவில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தினர் தரப்பில் விசாரித்தால், அஜீத் சார் ரொம்ப ஜெனியூனானவர்,சொன்னால் சொன்னபடி நடந்துகொள்பவர், அவர் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் என்பது முற்றிலும் தவறான தகவல். விடா முயற்சி படப்பிடிப்பு தாமதமாகக் காரணம், அதன் படப்பிடிப்பு நடத்துமிடங்களில் உள்ள பருவநிலை மோசமாக இருக்கிறது என்பதால்தான்.அதை மிக நெருக்கமாகக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறோம். அது சரியானதும் படப்பிடிப்பு தொடங்குவோம் என்கிறார்கள்.











