காலையில் மகிழ்ச்சி மாலையில் சோகம் – ஜனநாயகன் பட வழக்கு விவரம்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி அப்படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சனவரி 6,7 தேதிகளில் அந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.
தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்குழு பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால் திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப தணிக்கைக் குழுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. உறுப்பினர் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். 5 பேரில் 4 பேர் அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்குச் சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்.பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்யமுடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவைச் செல்லாது என்று கூறமுடியும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று நேற்று காலை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
உடனடியாக இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கில் பதில்மனு செய்ய அவகாசம் கோரியும், அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்று வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்காத நிலையில், அந்த உத்தரவை தனி நீதிபதி இரத்து செய்துள்ளார். படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் வழக்கு தொடரவில்லை. அதனால் தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கவேண்டும் என்றார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தணிக்கைக் குழு படத்திற்கு சான்று வழங்க பரிந்துரைத்த நிலையில் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம் என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், தணிக்கை வாரியம் பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?. படத்துக்குச் சான்று பெறும் முன்பு வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்?. தணிக்கை வாரியம் சான்று வழங்க பல நடைமுறைகள் இருக்கும்போது சான்றுக்காக பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இந்த விசாரணை நிறைவடைந்து வருகிற தீர்ப்பையொட்டித்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய இயலும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
இதனால், நேற்று காலையில் நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த ஜனநாயகன் படக்குழுவினர் மாலையில் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.










