விமர்சனம்

டான் – திரைப்பட விமர்சனம்

எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார். 

அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் படம்.

டான் என்றால் ரவுடிகளின் தலைவன் என்பார்கள். இந்த டான் வேற மாதிரி. கல்லூரியில் மாணவர்கள் விளையாடக்கூடப் போகக்கூடாது எந்நேரமும் படிப்பு படிப்பு என்று சொல்லும் ஒழுக்கநெறி ஆசிரியரை வீழ்த்தி மாணவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதால் சகமாணவர்களால் டான் என்றழைக்கப்படுகிறார்.

பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், பொறுப்பான இளைஞர் ஆகிய பாத்திரங்களுக்குப் பொருத்தமாக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். முதல்பாதியில் ஆட்டம் பாட்டம் என்று அட்டகாசம் செய்யும் சிவகார்த்திகேயன் இரண்டாம்பகுதியின் இறுதியில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

நாயகியாக பிரியங்காமோகன். அவருக்கு இன்னும் சில காதல் காட்சிகள் இருந்திருக்கக்கூடாதா? என நினைக்க வைத்திருக்கிறார். 

நாயகனின் நண்பர்கள் மற்றும் நகைச்சுவைக்கென பாலசரவணனும் விஜய்யும் இருக்கிறார்கள். சூரி இந்தப்படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். சிங்கம்புலி, மனோபாலா,முனீஸ்காந்த், காளிவெங்கட் ஆகியோரும் சிரிக்கவைக்க முயல்கிறார்கள்.

சின்னத்திரை பிரபலம் சிவாங்கி கவனிக்க வைத்திருக்கிறார். கல்லூரி முதலாளியாக வரும் ராதாரவியின் தோற்றமும் நடிப்பும் ஜேப்பியாரை நினைவுபடுத்துகிறது.

படம் நெடுக வரும் எஸ்.ஜே.சூர்யா,உருட்டல் மிரட்டல் கலந்த தன் நடிப்பால் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார். 

சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனியும் தன் அனுபவ நடிப்பின் மூலம் படத்தைத் தாங்கியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிராவின் நடிப்பு நன்று.

அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசையும் அளவாக இருக்கிறது.

கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவில் சில காட்சிகள் வண்ணமயமாகவும் சில காட்சிகள் சோதிப்பதாகவும் இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் புது இயக்குநர் சிபிசக்ரவர்த்திக்கு திரைக்கதையில் பல குழப்பங்கள்.

பள்ளி, கல்லூரிக் காட்சிகள் நிஜ மாணவர்களின் மனதில் எம்மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என யோசிக்கத் தவறியிருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா வேடத்தின் திடம், சமுத்திரக்கனி வேடத்தின் பலம்,சிவகார்த்திகேயனின் மனமாற்றம் ஆகிய நல்ல விசயங்களைச் சொல்லி படத்தை முடித்து வரவேற்பைப் பெறுகிறார்.

Related Posts