ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒரு கோடி – ஐங்கரன் வெளீயீட்டுச் சிக்கலில் நடந்தவை என்ன?
ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன்.
விஜய்சேதுபதி நடித்த றெக்க உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த கணேஷ் என்பவர் தயாரித்திருக்கிறார்.
இப்படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா சிக்கல் காரணமாக படவெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது.
கடைசியாக போனவாரம் இந்தப்படம் வெளீயாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் வெளியாகவில்லை.
அதன்பின் ,மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அன்றும் படம் வெளியாகவில்லை.
பிறகு, நேற்று (மே 13) காலை திரையரங்குகளில் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ஏன் இவ்வளவு இடையூறுகள்? என்றால், படத்தின் தயாரிப்பாளரின் முந்தைய படச் சிக்கல்கள் காரணமாக சுமார் நாலரை கோடி வரை பணம் கொடுக்க வேண்டியிருந்ததாம்.சம்பந்தப்பட்டவர்கள் எங்கள் பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் படத்தை வெளியிடவேண்டும் என்று சொல்லி பல தடைகளை ஏற்படுத்திவிட்டார்கள்.
படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது இப்படம் வெளியானால் நல்ல வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை யாரும் ஏற்கவில்லை.
அதன்பின் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் ஆகிய அமைப்புகள் இச்சிக்கலில் தலையிட்டு,ஒவ்வொன்றாகப் பேசி சமரசம் செய்துவந்திருக்கிறார்கள்.
கடைசியில் ஒரு கோடி தேவை எனும் நிலையில், நானே அந்த ஒரு கோடியைக் கொடுத்துவிடுகிறேன் என்று ஒப்புக்கொண்டு ஜி.வி.பிரகாஷ் கையெழுத்துப் போட்டதால் சிக்கல் சரியாகி படம் வெளியாகியிருக்கிறது.
இந்தப்படத்துக்காகப் பேசப்பட்ட சம்பளத்தையே முழுமையாகப் பெறவில்லை, அதையும் விட்டுக் கொடுத்து அதற்கு மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு ஜீ.வி.பிரகாஷ் பொறுப்பேற்றதால் படம் வெளியாகியிருக்கிறது.
விசயமறிந்தோர் இதற்காக ஜி.வி.பிரகாஷைப் பாராட்டி வருகின்றனர்.











