விமர்சனம்

அசுரகுரு – திரைப்பட விமர்சனம்

ஓடும் தொடர்வண்டியிலிருந்து பல கோடி ஓடுகிற மகிழுந்திலிருந்து சில கோடி, சுவற்றில் துளையிட்டு வங்கியில் கொள்ளை என கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கிறார் விக்ரம்பிரபு.

எதற்காக இப்படிக் கொள்ளை அடிக்கிறார்? இதைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம்.

கொள்ளையடிப்பது காதல் செய்வது சண்டை போடுவது ஆகிய எல்லாவற்றையும் மிக எளிதாகச் செய்கிறார் விக்ரம்பிரபு. காதலி கைவிட்டுவிட்டுப் போய்விடுவாரோ? எனக் கலங்கி நிற்கும் காட்சியில் நல்ல நடிப்பு.

நாயகி மகிமாவுக்கு நல்ல வேடம். அமைதியாக அறிமுகமாகி ஆர்ப்பாட்டமாக நடித்திருக்கிறார். ஒயிலாக புல்லட் ஓட்டுகிறார், வெளியே போடா என்று விக்ரம்பிரபுவிடம் சீறும் காட்சி சிறப்பு.அவர் புகை பிடிப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

விக்ரம்பிரபுவின் நண்பராக வரும் ஜெகன், காவல் அதிகாரியாக வரும் குமரவேல், தேநீர்க் கடைக்காரராக வரும் யோகிபாபு ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.

சுப்புராஜ் மற்றும் நாகிநீடு ஆகியோரின் வேடங்கள் திரைக்கதையை கூடுதல் சுவாரசியமாக்குகிறது.

துப்பறியும் நிறுவனம் நடத்துபவராக நடித்திருக்கும் ஜேஎஸ்பி சதீஷ், இயல்பாக நடித்திருக்கிறார்.அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.  

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கொள்ளைக் காட்சிகளைத் தெளிவாகக் காட்டுகிறது.
கணேஷ்ராகவேந்திராவின் இசையும் சைமன் கே.கிங்கின் பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.

கலை இயக்குநர் சரவணன் கூடுதலாக உழைத்திருக்கிறார். பணத்தாள்களால் அவர் செய்திருக்கும் வடிவமைப்பு வியக்க வைக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை சுவாரசியமான காட்சிகள் சரியான பாத்திரப்படைப்புகள் அமைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்தீப். நாயகன் கொள்ளையடிப்பதற்கான காரணம் மிகவும் பலவீனமாக  இருக்கிறது.

காலங்காலமாக தமிழ்த்திரையுலகில் இருக்கும் ஒரு வழக்கம், காதலனிடம் சிகரெட்டை விட்டுவிடு என்று காதலி கேட்பது, இந்தப்படத்தில் விக்ரம்பிரபு மகிமா நம்பியாரிடம் சிகரெட்டை விட்டுவிடு என்று கேட்கும் காட்சி அழகு. இதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

விக்ரம்பிரபுவுக்கு பலம் சேர்க்கும் படம்.

Related Posts