சினிமா செய்திகள்

கேங்ஸ் குருதிப்புனல் படப்பிடிப்பு திடீர் இரத்து – என்ன நடந்தது?

அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக ர்ஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இணையத்தொடர் கேங்ஸ் குருதிப்புனல்.

மார்ச் 19 அன்று மும்பையில் அமேசான் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய இணையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான ‘கேங்ஸ் குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தத் தொடரில் சத்யராஜ், அசோக் செல்வன், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.நோவா என்பவர் இயக்குகிறார்.

1970 களின் பின்னணியில் நடக்கும் இக்கதை இரு குழுக்களுக்கிடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறதாம்.

இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவந்தது.கடந்த சில நாட்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

ஏன்?

இந்தத் தொடரின் படப்பிடிப்பு இதுவரை சுமார் அறுபது விழுக்காடு முடிவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போதே இத்தொடருக்காக அமேசான் ஒதுக்கிய மொத்த நிதியும் செலவாகிவிட்டதாம்.

இயக்குநரின் திறமையின்மையே பட்ஜெட் எகிறக் காரணம் என்பது செளந்தர்யா ரஜினிகாந்த்தின் குற்றச்சாட்டு. எனவே, அன்றாடத் திட்டமிடுதல் தொடங்கி எல்லா விசயங்களையும் கண்காணிக்கத் தொடங்கினாராம்.இதனால் இயக்குநர் நோவாவுக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்துக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.

அதனால் படப்பிடிப்பு நடத்தாமல் இருக்க முடியுமா? தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது. கடந்த சில நாட்கள் வரை புதுச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

அசோக்செல்வன் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தனராம். அன்று காலை ஒன்பது மணிக்கே படப்பிடிப்பைத் தொடங்கவேண்டும் என்று செளந்தர்யா ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார். இயக்குநர் அதை ஏற்கவில்லை. இரண்டு மணிக்குத்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும் அதற்கேற்பத்தான் நான் திட்டமிட்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற செளந்தர்யா, படப்பிடிப்பே நடத்த வேண்டாம் எல்லாம் கிளம்புங்கள் என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாராம்.

இதனால் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை.இந்தச் சண்டையை வெளியில் சொல்லவும் முடியாத நிலை.

அன்று படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்றிருந்த நடிகர்களுக்கு படப்பிடிப்பு திடீர் இரத்து என்றதும் கடும் அதிர்ச்சி.

ஏன் என அவர்கள் கேட்டதற்கு, தொடருக்காக அமேசான் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் அதிகச் செலவு ஆகும் நிலை இருக்கிறது.தொடரை மிகத் தரமாக உருவாக்க வேண்டும் என்று நினைப்பதால் செலவு அதிகமாகிறது.ஆனால் நாங்கள் சொன்ன தொகை மட்டும்தான் தருவோம், அதிகமானதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமேசான் சொல்லிவிட்டது.

எனவே, அமேசானிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிதிநிலையை இறுதி செய்த பின்பு படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநருடன் சண்டை, அமேசானிடம் மேற்கொண்டு பணம் வாங்க முடியாத நிலை, இத்தொடருக்காக நடிகர்களீடம் வாங்கிய தேதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியாததால் ஏற்படவிருக்கும் குழப்பங்கள் ஆகிய பலமுனைச் சிக்கல்களால் தவிக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த், நான் ஏற்கெனவே எடுத்த கோவா,கோச்சடையான் ஆகியனவற்றினாலேயே பல சிக்கல்களைச் சந்தித்தேன் இப்போது இந்தத் தொடரிலும் இவ்வளவு சிக்கல்கள் வந்துவிட்டனவே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

Related Posts