சினிமா செய்திகள்

எனக்கு ரஜினியைப் பிடிக்கக் காரணம் இவர்தான் – திருமணம் பாடல் விழாவில் சேரன் வெளிப்படை

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைத் தொடர்ந்து சேரன் எழுதி இயக்கிருக்கும் படம் திருமணம். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது இத்திரைப்படம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சனவரி 21,2019 ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில்,படத்தில் நடித்திருக்கும் உமாபதி ராமையா, காவ்யாசுரேஷ், சுகன்யா, தம்பிராமையா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் இசையமைப்பாளர் சித்தார்த்விபின் ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ் ஆகியோரோடு மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து இளம் இயக்குநர்கள் கோபிநயினார், செழியன், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அருண்ராஜா காமராஜ், கார்த்திக் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் சேரன் பேசியதன் சுருக்கம்….

மூத்த இயக்குநர்களை மதிக்கும் கலாசாரம் இங்கே குறைந்து வருகிறது. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் போன்றோரை அழைத்து இங்கே மரியாதை செய்கிறோம். இவர்களைப் போன்ற மூத்தவர்கள் இல்லையென்றால், இன்று தமிழ் சினிமாவே இல்லை.

மகேந்திரன் சார் படங்களைப் பார்த்துத்தான் ரஜினியையே எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. எனக்கு ரஜினியின் ஸ்டைல் பிடிக்காது அவரது நடிப்பு பிடிக்கும். அதை வெளிப்படுத்தியவர் மகேந்திரன் சார்.

இதனால் மூத்த இயக்குநர்களையும் அவர்கள் வழிவந்த இளம் தலைமுறை இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, செழியன்,கார்த்திக் தங்கவேல் போன்றவர்களை இங்கே கௌரவப்படுத்தினாலே அது அடுத்த தலைமுறை இயக்குநர்களாகவிருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தரும்.

இப்படத்தின் டிரெயிலரைப் பார்த்தே கதையைக் கண்டுபிடித்துவிட்டார் பாரதிராஜா சார். அவர் சொன்னதுபோல, இத்திரைப்படம் பொருளாதாரச் சூழ்நிலைகள் எப்படித் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப்பற்றி அலசும் ஒரு படைப்பாக இருக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு சேரன் பேசினார்.

Related Posts