அடங்க மறு – திரைப்பட விமர்சனம்
காவல்துறையின் மந்திரச் சொல் ஒபே தி ஆர்டர். அதாவது சொன்னதைச் செய் அல்லது சொன்னதை மட்டும் செய். அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அடங்கமறுக்கிறார் நாயகன். அதன்விளைவும் அதன் பின்விளைவையும் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் படம்.
இளமைத்துடிப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் காவல்துறையில் சேர்ந்து சமுதாயத்தைச் சீரமைக்க நினைக்கும் இளைஞர்கள் எல்லோரையும் காயடிக்கும் அந்தத் துறை இந்தப்பட நாயகன் ஜெயம்ரவிக்கும் அதையே செய்கிறது.
ஒரு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தில் நடக்கும் இளம்பெண்களின் தொடர் தற்கொலை வழக்கை விசாரிக்கிறார் ஜெயம்ரவி. ஓரிடத்தில் இந்த விசாரணையிலிருந்து விலகிக்கொள் என்று உத்தரவு வருகிறது.
முதல்காட்சியிலேயே மாணவர்களுக்கு வழிகாட்டி சட்டத்தால் செய்ய முடியாததை தன் சாதுர்யத்தால் செய்கிறார் ஜெயம்ரவி. அமைச்சர் மகனின் காரை மறிக்கும் காட்சி அருமை.
துடிப்பான காவலதிகாரி, அன்பான மகன், அழகான காதலன், அதிரடி நாயகன் எனப் பன்முகம் காட்டும் வாய்ப்பு ஜெயம்ரவிக்கு. எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ராஷிகண்ணா நாயகி. அவருக்குப் பெரிதாக வேலையில்லை. ஆனால் செய்யும் வேலை பெரிது. அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.
பாபுஆண்டனி, கஜராஜ், மாத்யூ வர்கீஸ், நிதின்மேத்தா, பரத்ராஜ், ஷபீர், விஜய் விக்டர், ராஜா, சம்பத் என ஒரு டஜன் வில்லன்கள். அவர்களுடைய வேடங்களும் சமுதாய அந்தஸ்தும் பெரிது. அவர்கள் செயல் கொடிது. அவற்றை ஜெயம்ரவி எதிர்கொள்ளும் விதம் புதிது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களை விட பின்னணி இசை பெரிதும் ஈர்க்கிறது. காட்சியின் தன்மைக்குள் நம்மை உக்கிரமாக அழைத்துச்செல்கிறது.
படத்தின் பெரும் பலமாக வசனங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு காவலதிகாரியே சட்டத்துக்குப் புறம்பாக நடப்பது நியாயமா? என்கிற கேள்வியே எழாவண்ணம் தன் வசனங்களால் பாதுகாத்திருக்கிறார் விஜி.
ஜெயம்ரவியின் அதிரடிக்கு தனிப்பட்ட கோபம் மட்டும் காரணம் அல்ல சமுதாய அக்கறைதாம் காரணம் என்பதை வசனங்களில் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு நன்று. ரவியின் உணர்ச்சிப்பெருக்கை நம் கண்களுக்குச் சரியாகக் கடத்தியிருக்கிறது.
கதை என்று பார்த்தால் பழிவாங்கும் கதைதான், ஆனால் அது சற்றும் தெரியாத வண்ணம் புதுவண்ணத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் புது இயக்குநர் கார்த்திக் தங்கவேல்.
புதிய உத்திகளில் நடக்கும் கொலைகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு ஜெயம்ரவியின் பதிலடிகளும் செய்யும் செயல்களும்
கைதட்டல் பெறுகின்றன.
பெண்கள் பாதுகாப்புக்காக அடங்கமறுத்திருக்கும் ஜெயம்ரவிக்கு இப்படம் இன்னொரு தனிஒருவன்.











