விமர்சனம்

கனா – திரைப்பட விமர்சனம்

ஒரு ஏழை விவசாயி மகள் பெரும்பணக்கார விளையாட்டான மட்டைப்பந்தாட்ட வீராங்கனையாக உருவெடுத்து இந்திய மகளிர் மட்டைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து வெற்றி பெற எண்ணுகிறார் அது நடந்ததா? இல்லையா? என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடைக்குள் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கனா.

சொந்த அப்பா இறந்த துக்கத்திலும் கூட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்குமளவுக்கு தீவிர கிரிக்கெட் ரசிகராகவும் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டு விவசாயத்தை விடாமல் செய்வேன் என்கிற திடசங்கற்பம் பூண்டு நிற்கும் விவசாயியாகவும் சத்யராஜ் வாழ்ந்திருக்கிறார்.

விளக்குமாத்தில் அடி வாங்கினாலும் கிரிக்கெட் விளையாடியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொடுத்த வேடத்துக்கு உண்மையாக இருக்கக் கடுமையாகப் பயிற்சி எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

ஐஸ்வர்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் புதுவரவு தர்ஷனுக்கு இது முதல்படம் என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவு பொருத்தமாக இருக்கிறார்.

சத்யராஜின் நண்பராக வருகிறார் இளவரசு. ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் இக்காலத்தில் இளவரசு போல் நண்பர் எல்லோருக்கும் வாய்த்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைக்கிறார்.

என்னுயிர்த்தோழன் ரமா, கிராமத்து அம்மாக்களுக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறார். அன்பைக்கூட அதட்டிச் சொல்லும் அவர் பாங்கு கண்களில் நீரை வரவழைக்கிறது.

ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது ஜெயிச்சவன் சொன்னா கேக்கும்,

உன்னால முடியாதுன்னு ஒருத்தன் சொன்னா நீ நம்பவேண்டியது அவன இல்ல உன்னை

என்று படத்தின் நாயகிக்குச் சொல்வது போல தற்கால தன்னம்பிக்கையற்ற இளைய சமுதாயத்துக்குச் சொல்கிறார் பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்.

ஐஸ்வர்யாராஜேஷ் கையில் பையோடு கிளம்பிவருகிற நேரத்தில் பின்னணியில் பெரியார் படம் மாட்டியிருக்கும் ஒற்றைக்காட்சியில் இயக்குநரின் மொத்த எண்ணமும் வெளிப்படுகிறது.

விவசாயி வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும் அதே வங்கி வெற்றி பெற்ற வீராங்கனைக்கு அதைவிடப் பன்மடங்கு பரிசளிக்கும் காட்சியும் அதைப் பெற்றுக்கொண்டு நாயகி வீசும் சொற்களும் அரசுகளுக்குச் சவுக்கடி.

சின்னச் சின்னக் குறைகள் அடுத்து என்ன என்று எளிதில் யூகித்துவிடக்கூடிய திரைக்கதை ஆகியன இருந்தாலும் அருண்ராஜாகாமராஜின் சிந்தனையும் அதற்கு உண்மையாக உழைத்து உயிர் கொடுத்திருக்கும் நடிகர்களும் கனாவின் பலம்.

Related Posts