சீதக்காதி – திரைப்பட விமர்சனம்

நாடகங்களின் அழிவுக்குத் திரைப்படங்களின் வளர்ச்சி காரணம் என்கிற குற்றச்சாட்டு உண்டு, ஆனால் இந்தத் திரைப்படம் நாடகங்களின் வளர்ச்சிக்குத் துணையாக அமைந்திருக்கிறது.
மூத்த நாடக நடிகர் ஆதிமூலம் என்கிற அய்யா வேடத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார்.
இளவயதில் ஒரு நாடகக் காட்சி, நடுத்தர வயதில் ஒரு நாடகக் காட்சி, முதிர்ந்த வயதில் ஒரு காட்சி ஆகிய மூன்று தோற்றங்களில் வருகிறார் விஜய்சேதுபதி.
நடுத்தர வயது நடிகராக இருக்கும்போது நீதிமன்றத்தில் அவர் பேசும் வசனங்கள் மிகவும் ஆழமானவை.
படத்தில் இடம்பெறும் ஒரு நீண்ட காட்சியில் ஒளரங்கசீப் வேடத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திப் பாராட்டுப் பெறுகிறார் விஜய்சேதுபதி.
படத்தில் பாதிநேரம் கூட விஜய்சேதுபதி வரவில்லை ஆனால் படம் நெடுக நிறைந்திருக்கிறார். ஆனாலும் படம் நெடுக அவர் வரவில்லை என்பது பெரும்குறையாகத் தெரிகிறது.
விஜய்சேதுபதியின் உற்ற தோழராக வரும் மெளலி, மனைவியாக நடித்திருக்கும் அர்ச்சனா ஆகியோரின் திறமைக்கேற்ற தீனி குறைவு.
இயக்குநர் மகேந்திரன், ரம்யாநம்பீசன், காயத்ரி, ராஜ்குமார், பகவதிபெருமாள், இயக்குநர் டீகே, ஜி.எம்.சுந்தர் கருணாகரன் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.
இயக்குநர் மகேந்திரன் நீதிபதியாக நடித்திருக்கிறார். அவ்ரிடம் வரும் வழக்கு பார்ப்போருக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. சட்டப்படி சரியில்லை.
திரைப்படத்தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வருகிற சுனில் நன்றாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.
கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை நன்று.
சரஸ்காந்தின் ஒளிப்பதிவு, நாடகக் காட்சிகளுக்கும் திரைப்படக்காட்சிகளுக்கும் வேறுபாடு காட்டியிருக்கிறது.
நாளேடொன்றில் திரைப்பட விளம்பரங்களுக்கு மத்தியில் நாடக விளம்பரம் வரும் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளிலேயே, நாடக நடிகர்களின் உழைப்பு,அர்ப்பணிப்பு மற்றும் ஆதங்கம் ஆகியனவற்றைச் சொல்லும் ஒரு கதை,
திரைப்பட உலகத்தில் நடிகர்கள் குறிப்பாக நாயகர்களின் செயல்பாடுகள் மனோநிலை ஆகியனவற்றை விவரிக்கும் இன்னொரு கதை.
இவ்விரு கதைகளையும் ஒரு திரைக்கதைக்குள் சேர்த்து புதிய முயற்சி செய்து திகைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
அறிவியலுக்குப் புறம்பான ஒரு விசயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதைக்கு வாழ்ந்து மறைந்த ஒரு நடிகரின் பெயரைப் பயன்படுத்துவது ஏன்? என்கிற கேள்வி எழுகிறது.
நடிப்பு என்பது மிக எளிது, யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்குச் சவுக்கடி கொடுத்து, அதை அழகாகக் காட்சியும் படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலாஜிதரணிதரன்.