விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை – திரைப்பட விமர்சனம்

மலையேறினாலும் மச்சான் தயவு தேவை என்று தமிழில் பழமொழி உண்டு. அம்மொழிக்கு வலுச்சேர்ப்பதோடு பாசம் என்கிற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் அக்கா தம்பி. அத்தையின் பாதுகாப்போடு தனித்து வசிக்கிறார்கள். நீ எனக்கு அம்மா நான் உனக்கு அப்பா என்று பாசம் பொழியும் தம்பி.

அக்காவாக லியோமோல்ஜோஸ் என்கிற மலையாள நடிகை நடித்திருக்கிறார். தம்பியாக ஜீ.வி.பிரகாஷ்.

துடிப்புமிக்க போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி சித்தார்த். மக்கள் மருள நடக்கும் பைக் பந்தயம் நடத்தும் ஜி.வி.பிரகாஷை மடக்கிப் பிடித்து சட்டத்துக்கு மீறி ஒரு தண்டனை கொடுக்கிறார்.அதனால் சித்தார்த் மீது கொலைவெறியில் இருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். 

அந்த சித்தார்த்தே பாசமிக்க அக்காவின் கணவராக வந்தால்  என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் படம்.

சித்தார்த் காவல் அதிகாரி வேடத்துக்கு நூறு விழுக்காடு பொருத்தமாக இருக்கிறார். பாசமான முரட்டுத்தம்பியாகவே மாறியிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். 

தமிழுக்குப் புதுவரவான லியோ மோல் ஜோஸ் அழகுப்பதுமையாக இருக்கிறார். அன்பு ததும்பும் அவரது கண்கள் நம்மையும் சகோதரியாகவே பார்க்கத்தூண்டுகின்றன.

இன்னொரு நாயகியான காஷ்மீராவும் கவனிக்க வைக்கிறார். ஜீ,வி.பிரகாஷோடு பாட்டுப்பாடுகிறார், கதையின் முக்கியமான திருப்பத்துக்குக் காரணமாக இருக்கிறார்.
 
சித்தார்த்தின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், ஜீ.வி.பிரகாஷின் அத்தையாக நடித்திருக்கும் தனம் ஆகியோர் சிறப்பு. அதிலும் தனம், அருமையான வசன உச்சரிப்பு பொருத்தமான முகபாவம் ஆகியனவற்றில் அசத்துகிறார்.

பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு உதவி செய்திருக்கிறது. 

சித்துகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அளவாக இருக்கிறது.

மாமன் மச்சான் உறவுச் சிக்கலை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சசி. இரண்டு நாயகர்களுக்கும் சமமான வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென சிரத்தை எடுத்திருக்கிறார். பெண்களின் உடை குறித்த ஆண்களின் பார்வையை சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

முதல்பாதியில் நூலிழை பிடித்தது போல அழகாகப் போன திரைக்கதை இரண்டாம் பாதியில் ஊரைச் சுற்றி அலைக்கழிக்கிறது. மதுசூதனராவ் வருகிற காட்சிகள் அலுப்பு. அபத்தம்.

முதல்பாதி பச்சை இரண்டாம் பாதி சிவப்பு.

Related Posts