விமர்சனம்

கருவின் குற்றம் – தியா திரைப்பட விமர்சனம்

பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய்.

பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும்.

விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம் சி.எஸ் இன் இசை, அஜயன்பாலாவின் வசனங்கள் ஆகிய நல்ல அம்சங்கள் பல இருந்தும் எடுத்துக்கொண்ட கருவும் அதன் திரைக்கதை வடிவமும் உவப்பாக இல்லை.

பால்வடியும் முகம், பார்த்தவுடன் கன்னத்தைத் தடவி திருஷ்டி கழிக்க எண்ணும் பார்வையுடன் கூடிய சின்னஞ்சிறுமியை ,இப்படி எல்லாம் செய்யவைக்க எப்படி மனம் வந்தது?

பத்தொன்பது வயது ஆண், பருவக்கோளாறால் செய்யும் தவறுக்கு மரணதண்டனைதான் தீர்வா?

வலுக்கட்டாயமாகக் கருக்கலைப்புக்கு ஆளாகும் இளம்பெண்ணுக்கும் அந்தக் கருவுக்குமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு இப்படத்தின் பலம்.

ஆனால் திரைக்கதை அதைப் பலவீனமாக்கிவிட்டது.

சாய்பல்லவி நன்றாக இருக்கிறார், கண்ணுக்குத் தெரியாமல் குழந்தை இருக்கிறது என்றுணரும்போதும், அம்மாவைக் கொன்றதும் கணவணைக் கொல்லப்போவதும் தன் குழந்தைதான் என்று தெரியும்போதும் ஒரேமாதிரி முகபாவம் காட்டுகிறார்.

எந்த இடத்திலும் நாயகன் நாக சவுரியாவை காதலுடன் சாய்பல்லவி பார்க்கவில்லை, எனவே அவர் இறந்துவிடுவார் என்று இவர் பதறுவது ஒட்டவே இல்லை.

நாயகன் நாகசவுரியா இயக்குநர் சொன்னதைச் செய்திருக்கிறார்.

காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ஓரிடத்தில் மட்டும் சிரிக்கவைத்து மற்ற இடங்களில் சோதிக்கிறார்.

பட உருவாக்கத்தில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுகிற இயக்குநர் விஜய் இம்முறையும் வெற்றி பெறுகிறார். வழக்கம்போலவே கதை உருவாக்கத்தில் உள்ள பலவீனத்தால் தோல்வி அடைகிறார்.

1972 சனவரி 1 ஆம் தேதி முதல் இந்தியாவெங்கும் நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்புச் சட்டப்படி நடந்தது குற்றமில்லை.

பருவவயதில் தடுமாறிப்போன தம் குழந்தைகளுக்காகப் பெற்றோர் எடுக்கும் முடிவும் குற்றமாகாது.

ஆனால் இவற்றுக்கு இப்படத்தில் மரணதண்டனை கொடுக்கிறார் இயக்குநர். இதுதான் குற்றம்.

Related Posts