வந்தா ராஜாவாதான் வருவேன் – திரைப்பட விமர்சனம்
தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் பார்த்த கதை.
கதைப்படி இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு என்பதால் படத்தின் பெயருக்கேற்ப ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் சிம்பு.
அறிமுகக் காட்சியிலேயே அவருடைய அதிரடி தொடங்குகிறது படமெங்கும் அது தொடர்கிறது. கடைசிக்காட்சியில் உருக்கமாகப் பேசி கண்கலங்க வைக்கிறார்.
அவருக்காகவே, ‘சிங்கத்தோட நின்னு செல்ஃபி எடுக்கணும்னு ஆசைப்பட்டா செல்ஃபி இருக்கும்… நீ இருக்க மாட்டே, ‘கெத்துதான் சொத்து, நீ வேஷம் போடுற ராஜா நான் பொறந்ததுல இருந்தே ராஜா என்பன உட்பட படம் நெடுக அவருக்குப் புகழ் சேர்க்கும் வசனங்கள்.
கதைக்கு உட்பட்டு இருக்கும் வசனங்கள் தாண்டி, அவருடைய நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற, நீங்க ராசியான ஆளு சார், நீங்க காதலிச்ச பொண்ணுங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்குது, எனக்குத்தான் ஆளே இல்லியே, இப்படி பஞ்ச் டயலாக் பேசி எவ்வளவு நாளாச்சி ஆகியன உட்பட அவருக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் பல.
அதிலும் நான் சினிமாவுல நடிச்சா என்ன? என சிம்பு கேட்க அதற்கு விடிவி கணேஷ், சினிமாவில் நடிக்கப்போனா நேரத்துக்கு ஷூட்டிங் போகணும் என்று சொல்லும் போது சிரிப்பால் திரையரங்கம் அதிருகிறது.
கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகிய இரு நாயகிகளுடன் ஆளுக்கு ஒரு பாடல் சில காட்சிகள் என்றும் வாழ்ந்திருக்கிறார் சிம்பு. அவர்களும் தாராளமாக நடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
ரம்யாகிருஷ்ணன், பிரபு, நாசர், சுமன், ராதாரவி, மகத் மற்றும் சுந்தர்.சியின் கம்பெனி ஆர்டிஸ்டுகள் பலர் படத்தில் இருக்கிறார்கள். கதைப்படி ரம்யாகிருஷ்ணனுக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கிறது.
நகைச்சுவைக்கு ரோபோ சங்கர், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் இருக்கிறார்கள். ஆளுக்குக் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
வசனங்களில் மட்டுமின்றி பாடல்களிலும் சிம்புவின் சொந்தக்கதையே பேசப்பட்டிருக்கிறது.
எனக்கா ரெட்கார்டு எடுத்துப்பாரு ரெக்கார்டு, வந்தா ராஜாவாதான் வருவேன் உட்பட எல்லாப்பாடல்களிலும் சிம்புவின் புகழே பாடப்படுகின்றன. அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஹிப்ஹாப்தமிழாவின் இசை முந்தைய படங்களைப் போலவே இருக்கிறது. .
கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.
இன்னும் எவ்வளவு நவீனங்கள் தொழில்நுட்பங்கள் வந்தாலும் சுந்தர்.சி மாறவே போவதில்லை. சிம்புவின் புகழ் பாடுவதைத் தாண்டி மற்ற எல்லாக்காட்சிகளுமே அவருடைய முந்தைய படங்களைப் போலவே இருக்கின்றன.
யோகிபாபுவை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் அகலிகை நாடகக் காட்சிகள் சகிக்க முடியவில்லை.
சிம்புவின் தனிப்பட்ட விசயங்கள் இல்லையென்றால் இது படமாகவே இருந்திருக்காது











