விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி – திரைப்பட விமர்சனம்

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி.

சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது.

அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில் வைத்திருந்தது. போராட்டத்தில் குதிக்கும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே ஆங்கிலேயர்கள் இப்படிச் செய்தனர்.

கமல்ஹாசனின் குரலில் இந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார்கள்.

சைரா நரசிம்ம ரெட்டியாக நடிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்  சிரஞ்சீவி.

சண்டைக்காட்சிகள் மற்றும் தமன்னா மற்றும் நயன்தாராவுடனான காட்சிகளில் சிரஞ்சீவியின் நடிப்பு ஈர்க்கிறது.

சிரஞ்சீவிக்கு தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி. சிரஞ்சீவியின் ஆக்ரோஷ நடிப்புக்கு அந்தக்குரல் ஈடுகொடுக்கவில்லை.

சிரஞ்சீவியின் காதலியாக தமன்னா. மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார். நடனத்தில் அசத்துகிறார்.தமன்னா, இறந்து போகும் காட்சி அபாரம். சிலிர்க்க வைக்கிறது.

சிரஞ்சீவியின் மனைவியாக நயன்தாரா. அப்பாவிப் பெண் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். அதன்பின் அவருடைய மாற்றம் நன்று.

சைராவின் புகழைக் கேட்டு அவருடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிடும் தமிழ் வீரனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இதற்கு எதற்கு விஜய்சேதுபதி? 

அடையாளமே தெரியாத அளவுக்கு அமிதாப்பச்சன் இருக்கிறார். அவருக்கு நிழல்கள் ரவி குரல் கொடுத்திருக்கிறார். பொருத்தமாக இல்லை.

சுதீப், ஜெகபதிபாபு,ஆனந்த், ரோகிணி உட்பட நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.எல்லோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். படத்தில் அனுஷ்காவும் இருக்கிறார். 

அமித்திரிவேதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பாத்திரங்களுக்குப் பலம் சேர்க்கிறது.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு நன்று. தமன்னாவின் இறுதிக்காட்சியை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்.

தமிழ் வசனங்களை விஜய்பாலாஜி எழுதியிருக்கிறார். ஆங்கிலேயரை எதிர்த்து சிரஞ்சீவி வசனம் பேசும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு வருகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்தான்.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. ஏற்கெனவே தெரிந்த கதைக்கு திரைக்கதை அமைப்பது மிகவும் சவாலானது. அதில் அவர் வெல்லவில்லை. 

Related Posts