நான் அவளைச் சந்தித்த போது – விமர்சனம்
கனவுகளையே உணவாக உண்டு வாழும் திரைப்பட உதவி இயக்குநர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது.
உதவி இயக்குநரான நாயகன் சந்தோஷ்,உறவினரின் முகவரியைத் தொலைத்துவிட்ட நாயகி சாந்தினியைக் காண்கிறார். அவருக்கு உதவி செய்யப்போக எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது படம்.
உதவி இயக்குநர் வேடத்துக்கேற்ப இருக்கிறார் நாயகன் சந்தோஷ். உணர்ச்சிகரமான காட்சிகளில் இன்னும் நெகிழ்ந்துகொடுக்க வேண்டும்.
நாயகி சாந்தினிக்கு எப்போதும் சோகமாகவே இருக்கிற மாதிரியான வேடம். கண்களிலேயே அந்தச் சோகத்தை வெளிப்படுத்துகிறார்.
ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா உள்ளிட்ட ஊர்க்காரர்களும், கோவிந்தமூர்த்தி, சாம்ஸ் உள்ளிட்ட நாயகனின் நண்பர்களும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
மலையாள நடிகர் இன்னசண்ட் வேடம் நன்று. மிக அழகாக நடித்து அதற்குப் பலம் சேர்த்திருக்கிறார் அவர்.
ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்குத் தகுந்தாற்போல் அமைந்திருக்கின்றன.
ஹித்தேஷ்முருகவேல் இசை அளவாக இருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்.
ஹரிதினேஷ் சண்டை வடிவைமைப்பில் மாயவரம் பேருந்து நிலையச் சண்டை இயல்பாக அமைந்திருக்கிறது.
1996 இல் நடந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால், சில நம்ப முடியாத நிகழ்வுகளையும் மீறி காட்சிகள் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கின்றன.
அம்மாவுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சி அதிரவைக்கிறது.
உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்தியிருப்பதோடு உணவுக்கே கஷ்டப்பட்டாலும் தடம் மாறமாட்டோம் என்கிற உறுதியை உரத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்தர் பாராட்டுக்குரியவர்.










