சில்லுக்கருப்பட்டி – திரைப்பட விமர்சனம்
பிங்பேக், டார்டில்ஸ், காக்கா கடி, ஹேய் அம்மு ஆகிய நான்கு கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து காதல் வடிவில் மனிதநேயத்தைப் பறைசாற்றுவதுதான் சில்லுக்கருப்பட்டி.
குப்பை பொறுக்கும் சிறுவனின் நேர்மை, கோடீஸ்வர சிறுமியின் கள்ளங்கபடமற்ற அன்பு,
ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்து கவலைப் படும் உயிர்நேயவாதிகளின் சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றம்,
உலகத்தால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவனுக்குக் கிடைக்கும் காதல், கணவன் மனைவிக்கிடையேயான இடைவெளியை துடைத்தெறியும் மருந்து
ஆகிய நல்ல விசயங்களைக் காட்சிப்படுத்திக் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதாஷமீம்.
சாரா அர்ஜூன், லீலா சாம்சன், நிவேதிதா சதீஷ், சுனைனா ஆகிய நான்கு வெவ்வேறு வயதுப் பெண்களை வைத்துக்கொண்டு கதை சொல்லியதில் பெண்ணினத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார் ஹலிதா ஷமிம்.
அபிநந்தன், மனோஜ் பரம்ஹம்சா,விஜய் கார்த்திக் கண்ணன்,யாமினியக்னமூர்த்தி ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்.
பிரதீப்குமார் இசை, எல்லாக் கதைகளுக்கும் இசைந்து வந்திருக்கிறது.
நடிகர்கள் எல்லோருமே கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
லீலாசாம்சன் வெட்கப்படும் காட்சிகள் அழகு. மிகப்பெரும் சிக்கலை மிகச் சாதரணமாகக் கடந்து போகும் நிவேதிதா சதிஷ் ஈர்க்கிறார்.
சுனைனா சமுத்திரக்கனி ஆகியோரின் ஊடல் கூடல் ஆகியன சுவாரசியம். முந்தைய கதைகளைவிட அதிகம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறார்கள். இதையே முழுப்படமாகக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்க வைத்திருக்கிறது.
மனித உணர்வுகளைக் காட்சிப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஹலிதாஷமிம்.










