விமர்சனம்

விஸ்வரூபம் 2 – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசின் அதியுச்ச அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலைசஸ் விங் கில் பணிபுரியும் கமல், சந்திக்கும் சவால்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும்தான் படம்.

ஒரு வழக்கை எடுத்துக்கொண்ட அதுபற்றி விசாரிக்கிறார் என்றில்லாமல், ஒரு பேராபத்திலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றிவிட்டு அப்படியே இன்னொரு பேராபத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார்.

இது திரைக்கதையாக இல்லாமல் நிகழ்வுகளின் தொகுப்பாக இருப்பது பலவீனம்.

ஒற்றை ஆளாகப் படம் முழுக்க நிறைதிருக்கிறார் கமல், தொடக்கக் காட்சியிலிருந்து வந்தாலும் ஆண்ட்ரியாவும் பூஜாகுமாரும் ஊறுகாயாகத்தான் இருக்கிறார்கள்

உயரதிகாரியாக வரும் சேகர்கபூர் வில்லனாக நடித்திருக்கும் ராகுல்போஸ் ஆகியோர் தங்கள் நடிப்பால் யார் இவர்கள்? என்று கேட்கவைத்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாழ்க்கைத் தத்துவங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார் கமல்.

விஸ்வரூபம் படத்துக்காக எடுக்கப்பட்டு படத்தொகுப்பில் மீதமான காட்சிகளைத் தொகுத்து இரண்டாம் பாகமாக்கிவிட்டார் கமல்.

அதனால், இந்தக்காட்சி எந்த நாட்டில் நடக்கிறது? என்பதை உணரமுடியாதபடி இந்தியா, இலண்டன், ஆப்கானிஸ்தான் என்று மாறி மாறிக் காட்சிகள் வருகின்றன.

எது கமலின் நினைவு, எது இப்போது நடப்பது? என்பதைப் புரிந்துகொள்ள பார்வையாளர்கள் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டே ஆகவேண்டும். அவருக்கும் தெரியாது என்பதுதான் சோகம்.

வன்முறை வேண்டாம் என்பதைப் படம் முழுக்கக் கொடூரமாக இரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் கமல்,

பொம்பளைங்க பேச்சக் கேட்காத பொம்பளைங்க கிட்டப் பேசாத

என்பது உட்பட பல இடங்களில் பொம்பளைங்க என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஸ்வரூபம் வெறும் பிம்பம்.

Related Posts