பியார் பிரேமா காதல் – திரைப்பட விமர்சனம்
நடுத்தர வர்க்க இளைஞன் ஹரீஷ்கல்யாணுக்கு உடன்பணியாற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பெண் ரைசா மீது அளவு கடந்த காதல்.
ரைசாவுக்குக் காதல், கல்யாணம் ஆகியனவற்றின் மீது மாறுபட்ட கருத்து உள்ளது. அதில் பிடிவாதமாகவும் இருக்கிறார். இதனால் என்னவாகிறது என்பதுதான் படம்.
வீட்டுக்கு அடங்கி படிப்பு, வேலை, வேலை முடிந்தால் வீடு என்றிருக்கும் ஹரீஷ்,பக்கத்துக்குக் கட்டிடத்தில் வேலை செய்யும் ரைசாவைப் பார்ப்பதற்காக அலைகிற காட்சிகளிலும், அவரே பக்கத்து இருக்கைக்கு வந்ததும் தடுமாறும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
காதலுக்கும் தாய்ப்பாசத்துக்கும் இடையில் சிக்கிச் சிதையும் காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் ரைசா படத்துக்குப் பலம். தற்கால நாகரீகப் பெண்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார். உடலழகைக் காட்டி ரசிகர்களை மகிழ்விப்பதோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.
முனீஸ்காந்த், ஆனந்த்பாபு, ரேகா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ராஜாபட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவில் இளமைத் துள்ளல்.
யுவனின் இசையில் படம் நெடுகப் பாடல்கள். நல்ல மெட்டுகள் இருந்தும் நல்ல வரிகள் இல்லாதது குறை.
இளமை துள்ளும் காதலோடு இன்றைய இளம்பெண்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இளன்.
கதையில் இருக்கும் புதுமை திரைக்கதையில் இல்லாததால் கூறியது கூறல் என்பது போல ஒரே மாதிரியான காட்சிகள் திரும்பத் திரும்ப வருகிற தோற்றம் ஏற்படுகிறது.











