தேரே இஷ்க் மெய்ன் – இந்திப்பட விமர்சனம்
கல்லூரி மாணவரான தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும்,அவரை நல்ல மனிதனாக மாற்ற முடியும் என முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொடுக்கிறார் நாயகி கீர்த்தி சனோன்.
வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது.
இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் கீர்ததி சனோன்.அது காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடியதா? தனுஷ் வன்முறையை விட்டொழித்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
கோபக்கார மாணவர், அன்பான காதலர், பொறுப்புள்ள அதிகாரி எனப் பலவிதங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். எல்லாவற்றிலும் அவ்வளவு நேர்த்தி.காதலில் தவித்து நாயகியிடம் உரையாடும் இடங்களில் தன் நடிப்பால் பெரும் வரவேற்பு பெறுகிறார்.
அழகான பெண் அறிவுடனும் இருந்துவிட்டால் எல்லோரும் அவளுக்கு அடிமை என்பார்கள்.அதை இப்படத்தின் நாயகி பீர்த்தி சனோன் உறுதி செய்கிறார்.சிறப்பாக நடித்து மகிழவும் நெகிழவும் வைக்கிறார்.
தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்,கச்சிதமாக நடித்து கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் புஷ்பராஜ் ராய் செளத்ரி, எதார்த்தம் மட்டுமே பேசும் மக்களின் பிரதிநிதிபோல் நடித்து வெறுப்பை சம்பாதிக்கிறார்.
இன்னும் நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.அவரவர் வேலையைச் செய்திருக்கிறாரகள்.
துஷார் காந்தி ராய் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் உணர்வுகள் காட்சிகளிலும் கடத்தப்பட்டிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் சுகம், பின்னணி இசை இதம்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த் எல்.ராய்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
எனும் திருக்குறளில் மறம் எனப்படும் வீரம் என்பதற்குப் பதிலாக சினம் என்று போட்டால் பொருத்தமாக இருக்கும் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மையக்கதை திருக்குறள் காலப்பழசு என்றாலும் பாத்திரப்படைப்புகள் அவற்றைக் கையாண்ட விதம் ஆகியவற்றில் கவர்கிறார்.
தனுஷும் கீர்த்தி சனோனும் பெரும் துணையாக இருக்கிறார்கள்.
– முத்து











