777 சார்லி – திரைப்பட விமர்சனம்
இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சொல்லாடல் உண்டு.
அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது 777 சார்லி.
படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி. நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,
திரையரங்குக்குச் சென்று பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.
படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நாய் இல்லாத காட்சிகளே இல்லை. அதுவும் பல்வேறு சேட்டைகள் செய்து நம்மைச் சோர்வில்லாமல் பார்க்கவைக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் ரக்ஷித்ஷெட்டிக்கு இரண்டாமிடம்தான். முரடனுக்குக் காதல் வந்தால்? என்கிற கதைகளை ஏராளமாகப் பார்த்துவிட்டோம், இந்தப்படத்தில் முரடனுக்கு இன்னொரு உயிர்மீது காதல் வந்தால்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
சார்லியிடம் மாட்டிக்கொண்டு ரக்ஷித் அனுபவிக்கும் கொடுமைகள் அதன்பின் அனுபவிக்கும் பேரானந்தம் அதற்குப்பின் வரும் பெரும்சோகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரக்ஷித்.
சில காட்சிகளில் வரும் நாயகி சங்கீதாசிருங்கேரிக்கு அழகான கதாபாத்திரம். பொருத்தமாக நடித்து அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.
சில காட்சிகளில் வருகிற பாபிசிம்ஹா சிறப்பு. வசன உச்சரிப்புகள், உடல்மொழி ஆகியனவற்றில் இளவயது ரஜினிகாந்த்தை நினைவுபடுத்துகிறார்.
அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவில் மனித உணர்வுகளைக் காட்டியது மட்டுமின்றி தெற்கிலிருந்து வடக்குவரை இந்திய ஒன்றியத்தைச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள்.
நோபின்பால் இசையில் படத்தின் கதைசொல்லிச் செல்கின்றன பாடல்கள். பின்னணி இசையும் இயல்பு.
படத்தொகுப்பு செய்திருக்கும் பிரதீப்ஷெட்டி, இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
ஆசை,கோபம்,சோகம் உள்ளிட்ட பல உணர்வுகள் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை என்பவை உட்பட ஏராளமான விசயங்களைச் சின்னசின்ன வரிகளில் நம் மனதில் பதியவைத்திருக்கிறார் தமிழில் வசனங்களை எழுதியுள்ள கே.என்.விஜயகுமார்.
அழகான உணர்வுகள், ஆழமான கருத்து ஆகியனவற்றை ஒருங்கிணைத்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு இப்படி ஒரு படத்தை முதல்படமாக எடுக்கத் துணிந்த இயக்குநர் கிரண்ராஜ் எதிர்காலத்தில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உலாவருவார் என்பதில் மாற்றமில்லை.












