விடா முயற்சி – திரைப்பட விமர்சனம்

அஜீத்தும் த்ரிஷாவும் கணவன் மனைவி.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது விவாகரத்து வரை போகிறது.அந்தச் சூழலில் த்ரிஷாவின் தாய்வீட்டில் அவரைக் கொண்டுபோய் விட மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள்.அநதப் பயணத்தின்போது த்ரிஷா கடத்தப்படுகிறார்.கடத்தப்பட்ட மனைவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனி ஒருவனாக இறங்குகிறார் அஜீத்.கண்டுபிடித்தாரா? கருத்து வேறுபாடு நீங்கி கணவன் மனைவி இணைந்தனரா? என்பனவற்றைச் சொல்வதுதான் விடாமுயற்சி.
மழுமழு முகத்தோடு திருமணக் கோலம், சில நாள் தாடி மீசையோடு இல்லறக் காலம், நரைத்த தலை தாடி மீசையோடு அதிரடி முகம் ஆகியனவற்றின் மூலம் தன் இரசிகர்களுக்கு உற்சாகமூட்டுகிறார் அஜீத்.நூறு பேர் என்றாலும் அடித்துத் துவம்சம் செய்யும் அஜீத் ஆறு பேரிடம் அடி உதை வாங்கி அல்லல்படும் வேடத்தை ஏற்றிருக்கிறார்.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.இப்படத்தில் இருப்பது போன்ற நாகரிக கணவன் பாத்திரத்தை எங்கும் பார்க்க முடியாது அப்படிப்பட்ட வேடத்துக்கு அட்சர சுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் த்ரிஷா அழகுப்பதுமையாகத் தோற்றமளிக்கிறார்.கணவனைப் பிரிந்து செல்லும் காட்சிகளிலும் மிக நிதானமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
எதிர்மறை நாயகர்களாக அர்ஜூன்,ஆரவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.திடகாத்திரமான ஆரவ்வுக்கும் திடமான அர்ஜூனுக்கும் ஏற்றாற்போல் சண்டைகள் மற்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன.
அர்ஜூனின் மனைவியாக நடித்திருக்கும் ரெஜினாவுக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.அச்சமூட்டும் அந்த வேடத்தை அநாயசமாகச் செய்திருக்கிறார்.
அஜீத்,த்ரிஷாவின் நண்பராக நடித்திருக்கும் ரம்யா கொஞ்ச நேரமே வந்தாலும் நன்று.
ஓம்பிரகாசின் ஒளிப்பதிவில் அஜர்பைஜானின் தோற்றத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.நீண்ட நெடுஞ்சாலைகள் அதில் நடக்கும் பரபரப்பான காட்சிகள்,கதாபாத்திரங்களின் உணர்வுகள் ஆகியனவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.
அனிருத்தின் இசையில் தொடக்கப்பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது.அடுத்தடுத்த பாடல்கள் சண்டைக்காட்சிகளுக்குப் பின்னணி இசை போல் அமைந்து உத்வேகமூட்டுகின்றன.பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.
மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார்.எல்லோரும் யூகிக்கக்கூடிய வகையிலேயே திரைக்கதை சென்று முடிந்திருப்பது பெரும் பலவீனம்.
வாழ்வின் மிகக் கடினமான நிகழ்வுகளையும் நாசூக்காக எதிர்கொள்ளும் கணவன் மனைவி, கொடுமையான போராட்டத்தைத் தன்னந்தனியே நடத்தும் துணிவு கொண்ட கதாநாயகன்,ஆள் கடத்தல்,அமிலக் கொலைகள் செய்யும் கொடூரமான நபர்கள் ஆகியோரைக் காட்சிப்படுத்திய விதத்தில் தன் தனித்தன்மையைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.
ஆங்கிலப்படங்களுக்கு நிகரான படமன்று ஆங்கிலப்படமேதான்.
– அன்பன்