செய்திக் குறிப்புகள்

பாண்டிராஜின் தொடர்வெற்றிக்குக் காரணம் இதுதான் – மிஷ்கின் வெளிப்படை

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ.
தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.

இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம்நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்,அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார்.மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.இயக்குநரும் நடிகருமான மிஷ்கின்,முற்றிலும் மாறுபட்ட காவலதிகாரி வேடத்தில் தோன்றுகிறார்.மேலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு கதை,திரைக்கதை,இயக்கம் : பாண்டிராஜ்,ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்,இசை :பாக்ஸன் (Foxn),படத்தொகுப்பு : பிரதீப் ஈ.ராகவ்,கலை இயக்கம் :த.இராமலிங்கம்
சண்டை : கலாய் கிங்ஸன்.

இந்தப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில்,தமிழ்க்குமரன் புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பசங்க பொரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு,மே 20 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் பேசியதாவது..,

பரிமளா அண்ட் கோ பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருகை தந்துள்ள அனைத்து கலைஞர்களையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்தப்படத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசவிரும்புகிறேன்.நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்தப்படத்தின் முழுப்பொறுப்பையும் நாங்கள் பாண்டிராஜ் சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம்.இந்தப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் அவர்தான்.அவர் உழைப்பு,அர்ப்பணிப்பு உண்மையிலேயே அபாரமானது.சமீபத்தில் பின்னணி பணிகளை பார்த்தபோது,எப்போது படம் எடுத்தீர்கள்? என்று பலரும் கேட்கும்படி ஆச்சரியப்படும்படி அவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.
இந்தமாதிரி உழைக்கும் இயக்குநரை பார்ப்பதே கடினம்.இந்தப்படத்தில் பணியாற்றிய முழுகுழுவும், ஒரு குடும்பம்போல இணைந்து உழைத்திருக்கிறது.அதனால் இந்தப்படம் மிகவும் அழகான படைப்பாக உருவாகியுள்ளது.
இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது….

இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்துள்ள அனைத்து மீடியா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேடையில் பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,ஜெயராம் சார்,ஊர்வசி அக்கா,ஹீரோயின்,சாண்டி மாஸ்டர் போன்ற பல முக்கியமான கலைஞர்களுடன் நானும் உட்கார்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.பரிமளா அண்ட் கோ படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் சார் எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.எப்படி நடிக்கவேண்டும்,எப்படி அந்தக்காட்சியை அழகாக கொண்டு வரவேண்டும் என்று மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுத்தார்.அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது.
சில படங்கள் ஆண்களுக்குப் பிடிக்கும்,சில படங்கள் பெண்களுக்குப் பிடிக்கும்,சில படங்கள் குறிப்பிட்ட வயதினருக்கே பிடிக்கும். ஆனால் பாண்டிராஜ் சாரின் படங்கள் என்றால் குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கும் படங்களாக இருக்கும்.தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து இரசிக்கக்கூடிய அழகான குடும்பத் திரைப்படம்தான் பரிமளா அண்ட் கோ.இந்தப்படம் அனைவரும் திரையரங்கில் குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு சிறந்தபடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சார் மற்றும் தயாரிப்பாளர் சார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.

இயக்குநர், நடிகர் ஆதித்யா பேசியதாவது..,..

அனைவருக்கும் வணக்கம்.இது உண்மையிலேயே ஒரு அருமையான டீம்.பாண்டிராஜ் அண்ணா அடிக்கடி என் ஆபிஸுக்கு வருவார். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரங்களில் நாங்கள் சந்திப்போம்.அந்த சந்திப்புகள் எப்போதும் அருமையான மாலையாக இருக்கும்.அவர் மிகவும் எளிமையாகவும்,அன்பாகவும் பழகும் மனிதர்.இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.ஆனால் அதற்காக அண்ணாவிடம் நிறைய டேக்குகள் வாங்கியிருக்கிறேன்.இருபது,இருபத்திரண்டு டேக்குகள் கூட போயிருக்கும்.ஆனாலும் மிகவும் பொறுமையாக இருந்து,ஒரு நடிகருக்கு எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அழகாக வழிகாட்டினார்.
கேமரா முன் நடிப்பது எளிதல்ல.இங்கே ஜெயராம் சார்,ஊர்வசி மேடம் போன்ற பெரிய கலைஞர்கள் இருக்கிறார்கள்.அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஒரு பெரிய அனுபவம்.அந்த அழுத்தம் எனக்கும் இருந்தது.அதனால்தான் இவ்வளவு டேக்குகள் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.பாண்டிராஜ் அண்ணா எந்தப்படம் எடுத்தாலும் அது மக்களிடம் நிச்சயமாக சென்று சேரும்.குடும்பம் முழுவதும் சேர்ந்து பார்க்கக்கூடிய படங்களைத்தான் அவர் எப்போதும் கொடுப்பார்.அதேபோல் பரிமளா அண்ட் கோவும் ஒரு அருமையான குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது.இந்தப்படம் பெரிய வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி என்றார்.

நடிகர் சஞ்சீவி பேசியதாவது…..

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.இந்தப்படத்தில் பணியாற்றிய எங்கள் இயக்குநர் பாண்டிராஜ் சார்,தமிழ்க்குமரன் சார் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது.நான் பலவருடங்களாக பாண்டிராஜ் சாரை பின்தொடர்ந்து வந்தேன்.ஆனால் சரியான நேரம் அமையவில்லை.அதன்பிறகு “மூடர் கூடம்” படத்தை சார் வெளியிட்டார்.அதன்பின்னர் இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ரொம்ப நன்றி சார்.
இந்தப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.அதற்கும் நன்றி.இந்த பெரியமேடையில் எனக்கும் ஒரு இடம் கொடுத்து,இந்த வாய்ப்பை வழங்கிய பாண்டிராஜ் சார் மற்றும் தமிழ்க்குமரன் சாருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் ஹர்ஷத் பேசியதாவது..,

இப்போது வெயில் அதிகமாக இருக்கிறது.எல்லோரும் உடம்பை நன்றாக எல்லாரும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
பரிமளா அண்ட் கோ பாண்டிராஜ் சார் படத்தில் நடிப்பது எனக்கு முதல்அனுபவம்.குறிப்பாக பாண்டிராஜ் சாருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமான விசயம்.அவருடைய உதவிஇயக்குநர்கள்,தொழில்நுட்பக் குழு,கேமராமேன் என அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள்.எனக்கு பாண்டிராஜ் சார் பல வருடங்களாகத் தெரியும்.அவருடைய படங்களைப் பார்த்து,ஒருநாள் அவர் படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.அந்த ஆசை இந்தப்படத்தின் மூலம் நிறைவேறியது.இந்தப்படத்தைப் பார்த்து என்னை நேரடியாகத் தேர்வு செய்து வாய்ப்பு கொடுத்தது அவர்தான்.அவருடன் வேலை செய்த அனுபவம் வேறமாதிரி.மிகவும் வேகமாகவும், அனுபவத்துடனும் வேலை செய்வார்.அதுதான் அவருடைய சிறப்பு.இந்த வாய்ப்புக்காக பாண்டிராஜ் சாருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை காயத்திரி பேசியதாவது..,

இந்த தருணம் எனக்கு ஒரு கனவு நனவானதுபோல இருக்கிறது.பாண்டிராஜ் சாரை சந்தித்ததிலிருந்து,டீசர் பார்த்ததுவரை,இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை எல்லாம் சந்திப்பதுவரை — எல்லாமே ஒரு கனவு போலவே இருக்கிறது.
இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்ததருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது.என்ன சொல்லவேண்டும் என்பதே தெரியவில்லை.ஏனெனில்,பாண்டிராஜ் சாரின் படங்களை ஒரு இரசிகராகப் பார்த்து இரசித்து வளர்ந்திருக்கிறோம்.அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் என்னை அழைத்து இந்தவாய்ப்பைக் கொடுத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.இந்தப்படத்தின் நடிகர்கள், உதவிஇயக்குநர்கள் என அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள்.அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பரிமளா அண்ட் கோ இந்த மே மாதம் வெளியாக இருக்கிறது.இந்தப்படத்தை மக்களிடம் நல்லமுறையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது என்று நம்புகிறேன்.இந்தவாய்ப்பு கிடைத்ததற்காக மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி என்றார்.

நடிகை அனந்திகா பேசியதாவது..,

பரிமளா அண்ட் கோ எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான படம்.இந்தப்படம் என் இதயத்தில் எப்போதும் ஒரு தனி இடம் பெறும்.இந்தப்படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
முதலில் பாண்டிராஜ் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.அவருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது.அவர் அழைத்தபோது நான் இந்தப்படத்தில் நடிப்பேன் என்று கூட நினைக்கவில்லை.ஆனால் இன்று இந்தமேடையில் நம்முடைய படத்தை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.ஜெயராம் சார்,ஊர்வசி மேம்,சஞ்சனா,சாண்டி மாஸ்டர் மற்றும் இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருடனும் சேர்ந்து வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.
இந்தக்கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தன்மையும் முக்கியத்துவமும் இருக்கிறது.இப்படிப்பட்ட வித்தியாசமான கதையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.பரிமளா அண்ட் கோ படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்கவேண்டும்.இந்தப்படம் குடும்பம் முழுவதும் சேர்ந்து சிரித்து இரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.இந்தப்படத்தில் நான் நடுவில்தான் இணைந்தேன்.முதலில் என்னை தொடர்புகொண்ட ராம்கி சாருக்கு நன்றி. ஆனால் இந்தவாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கியகாரணம் அசோசியேட் டைரக்டர் திவ்யா.இந்த கதாபாத்திரத்தைப் பற்றி மிகவும் பொறுமையாக விளக்கி,எனக்கு இருந்த சந்தேகங்களை நீக்கி,நீ கண்டிப்பாக இதை செய்யவேண்டும் என்று நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.அதற்காக ரொம்ப நன்றி திவ்யா.இந்தப்படத்தில் ஜெயராம் சார்,ஊர்வசி மேம்,மிஷ்கின் சார் போன்ற பெரியகலைஞர்கள் இருப்பது தெரிந்தபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.அவர்களுடன் எனக்கு நேரடி காம்பினேஷன் இல்லையென்றாலும், அவர்கள் இருக்கும் ஒரு புராஜக்டில் நானும் ஒருபகுதியாக இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
ஊர்வசிமேம் எனக்கு ஒரு பெரிய ரோல்மாடல்.அவருடைய சமீபத்திய பேட்டிகள் எல்லாம் நான் அடிக்கடி பார்ப்பேன்.அந்தமாதிரியான ஒரு நடிகையுடன் ஒரேபடத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.ஜெயராம் சார் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த நடிகர்.குறிப்பாக “பஞ்ச தந்திரம்” காலத்திலிருந்தே அவருடைய கதாபாத்திரங்களைஒ பார்த்து இரசித்திருக்கிறேன்.இன்று அவருடன் ஒரேபடத்தில் இருப்பது எனக்கு ஒரு ஸ்பெஷல் மூமெண்ட்.
இந்தப்படத்தின் இசையமைப்பாளர் பிராக்ஸன்.திங்க்மியூசிக் சந்தோஷ் கண்டுபிடித்த திறமையான கலைஞர்.சந்தோஷ் கண்டுபிடிக்கும் திறமைகள் எப்போதும் தனித்துவமானவை என்பதால்,பிரக்ஸினும் ஒரு சிறப்பான திறமை கொண்டவர் என்று நான் நம்புகிறேன்.இந்தப்படத்திற்கு அவர் மிகவும் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
இந்தப்படத்தில் சாண்டி மாஸ்டருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.சாண்டி மாஸ்டர் எனக்கு மட்டும் அல்ல,நம்ம எல்லாருக்கும் மிகவும் ஸ்பெஷலானவர்.நான் சிறுவயதில் இருந்தே அவரை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.அவர் எப்போதும் நம்மவீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர்போல,மிகவும் நெருக்கமாகப் பழகுவார்.இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன் பாண்டிராஜ் சாரின் வழக்கமான குடும்பங்கள் இரசிக்கும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் சாண்டி மாஸ்டர் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.“பரிமளா அண்ட் கோ” படத்தில் இரண்டு பெரிய லெஜண்ட்ஸான ஜெயராம் சார்,ஊர்வசி மேடம் ஆகியோருடன் சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம்.அதோடு மிஷ்கின் சார் போன்ற தனித்துவமான கலைஞரும் இந்தப்படத்தில் இருப்பது இன்னும் ஸ்பெஷல்.அவரை நான் “தலைவர்”ன்னு தான் சொல்லுவேன்.
இந்தப்படத்தில் எல்லாருடனும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இருந்தன.அது எனக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது.எல்லாரையும் கலாய்த்து, சிரிச்சு,ஒரு குடும்பமாக இந்தப்படம் உருவானது.
பாண்டிராஜ் சார் பற்றிச் சொல்லணும்னா,அவரோட ஸ்பீட் வேற லெவல்.காலையிலே ஏழுமணிக்கு முதல்காட்சி என்றால்,ஆறரை மணிக்கே அடுத்தகாட்சி தயாராகி இருக்கும்.நாங்க இன்னும் மேக்கப் முடிக்காம இருக்கும்போதே,அவர் ஒரு ஷாட் முடிச்சு அடுத்த ஷாட்க்கு போயிருப்பார்.அந்தஅளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் வேகம்.
பாண்டிராஜ் சார் படப்பிடிப்பில் எங்களுக்குக் கொடுத்த சுதந்திரம் ரொம்ப ஸ்பெஷல்.அதனால் சாப்பிடக்கூட நேரம் தெரியாமல் வேலை செய்திருக்கோம்.ஆனாலும் அது கஷ்டமாக இல்ல,ரொம்ப ஜாலியான அனுபவமாக இருந்தது.மிஷ்கின் சார் உடனான தருணங்கள்கூட மறக்கமுடியாதவை.இரவுநேரங்களில் அவருடைய ஆபிசுக்கு போய் மியூசிக்,புக்ஸ்,சினிமா பற்றிப் பேசுவோம்.அவர் கதைகள்,அவர் பேசும் விசயங்கள் எல்லாமே ஒரு பெரிய அனுபவம்.இந்தப்படத்தில் மிஸ்டரி, காமெடி, ஃபன், எமோஷன் என எல்லாமே இருக்கும். பாண்டிராஜ் சார் இதுவரைக்கும் செய்யாத ஒரு புதியஜானரில் இந்தப்படம் இருக்கும்.திருக்குமரன் சார் மிகவும் அன்பானவர் அவருக்கு என் நன்றி. “பரிமளா அண்ட் கோ” எல்லாரும் பார்த்து இரசிக்க வேண்டிய ஒரு கமர்ஷியல் திரைப்படம்.குடும்பத்துடன் வந்து கண்டிப்பாகக் கொண்டாடுங்கள்.நன்றி என்றார்.

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம்.முதலில் பாண்டிராஜ் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்.இந்தப்படத்தை நான் எவ்வளவு மகிழ்ச்சியாக செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.தினமும் அதை நீங்கள் நேரில் பார்த்து இரசித்திருக்கிறீர்கள்.இந்த அழகான நினைவுகளை எனக்குக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்.
தமிழ் சார்,உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.படப்பிடிப்புதளத்தில் நடந்த ஒவ்வொரு உரையாடலும் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல்,அனைவரிடமும் கருத்து கேட்டு,எல்லோரையும் சமமாக மதித்துப் பேசும் உங்கள் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்தப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால்,இந்தமேடையில் இருக்கும் நடிகர்களின் பெயர்களைக் கேட்டதும் எந்த நடிகருக்கும் “நாமும் இந்தப்படத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்” என்ற ஆசை வரும்.அதேஉணர்வு எனக்கும் ஏற்பட்டது.முதல்முறை பாண்டிராஜ் சாரை சந்தித்தபோதே “எப்படியாவது இந்தப்படம் அமையவேண்டும்” என்று மனதார விரும்பினேன்.எல்லாமே மிக வேகமாக நடந்தது.படப்பிடிப்புகூட கண்மூடித் திறப்பதற்குள் முடிந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது. இப்போது அந்த படப்பிடிப்பு நாட்களை மிகவும் நினைத்து வருந்துகிறேன்.தினமும் வீட்டிலிருந்து கிளம்பி “பரிமளா வீட்டிற்கு” போவது போலவே உணர்ந்தேன்.படப்பிடிப்புதளம் ஒரு குடும்பம்போல இருந்தது.
ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி மேம் இருவரும் படப்பிடிப்புதளத்தில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும்.எதற்கும் உடனே நகைச்சுவையான பதில்கள் வரும்.காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல்,பலமுறை நான் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.அது எனக்கு புதியஅனுபவமாக இருந்தது.உங்கள் இருவரின் ஜோடிக்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் இருக்கிறார்கள்.நானும் அதில் ஒரு சிறிய இரசிகைதான்.உங்கள் பழையகாட்சிகளை சவுண்ட் இல்லாமல் போட்டாலும் வசனங்களை சொல்லும் அளவுக்கு நான் பலமுறை பார்த்து இரசித்திருக்கிறேன்.மிஷ்கின் சார் படப்பிடிப்புதளத்தில் இருந்தாலே ஒரு தனிஉற்சாகம் இருக்கும்.அவருடனும்,இங்கே இருக்கும் ஒவ்வொருவருடனும் சேர்ந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
நாங்கள் இந்தப்படத்தை எவ்வளவு மகிழ்ச்சியாக உருவாக்கினோமோ,அதேஅளவுக்கு நீங்கள் அனைவரும் இந்தப்படத்தை இரசித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.மிகவும் நன்றி என்றார்.

நடிகை ஊர்வசி பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.எல்லோரும் இந்தப்படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய விசயங்கள் சொல்லிவிட்டார்கள்.இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்தப்படம் மிகவும் சிறப்பான ஒன்று.ஒரு நடிகராக வாழ்க்கையில் சிலசமயங்களில் மட்டுமே “இந்தகதைதான் உண்மையான ஹீரோ” என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும்.இந்தகதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.
முழு திரைக்கதையையும் கேட்டபிறகு,இன்னும் விரிவாக கேட்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.அதற்குப்பிறகு இந்தபடத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது.அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.ஏனெனில்,நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம்.பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன.சிலது எனக்கு பிடிக்கும்,சிலது ஜெயராமுக்கு பிடிக்காது.ஆனால் இந்தகதை வந்தபோது இருவருக்கும் ஒரேநேரத்தில் பிடித்தது.காரணம்,இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை;உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும்,இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை.
பாண்டிராஜ் உள்ளிருக்கும் எழுத்தாளருக்கு எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.“பசங்க” படத்திலிருந்து அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன்.ஒருகதையை வடிவமைப்பதில் அவர் மிகவும் நேரம் எடுத்துக்கொள்வார்.ஆனால் படப்பிடிப்பில் அவர் வேகம் வேற லெவல்.மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள்.ஆனால் சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் மிக வேகமாக முடிக்கப்பட்ட படம் இதுதான்.எப்போது தொடங்கினார்கள்,எப்போது முடித்தார்கள் என்று எனக்கே ஆச்சரியம்.என்னால் சிலநாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன.மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டியிருந்தது.ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்தபடத்தை செய்தோம்.ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
ஒரு நல்லகதை,நல்லகதாபாத்திரங்கள் அமைந்துவிட்டால் நடிகர்களாக நாமும் அதில் ஆர்வமாக இருப்போம்.அதுதான் இந்தபடத்திலும் நடந்தது.நாங்கள் இதற்குமுன் பல குடும்பபடங்களில் நடித்திருந்தாலும்,இந்தபடத்தில் ஒருகாட்சியும் பழையபடங்களை நினைவூட்டும் மாதிரி இல்லை.ஒவ்வொரு காட்சியும் புதிதாகவே இருந்தது.அனந்திகா,சஞ்சனா ஆகியோருடன் பணியாற்றியது மிகவும் இயல்பான அனுபவமாக இருந்தது.இரண்டு மூன்று நாட்களுக்குப்பிறகு நாங்கள் எல்லோரும் நடிகர்கள் என்ற உணர்வே மறந்து,ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.
மிஷ்கின் சார் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை எல்லோரும் அறிவார்கள்.ஆனால் இந்தபடத்தில் அவர் உள்ளிருக்கும் நடிகர்,அதிலும் குறிப்பாக அவரது நகைச்சுவை டைமிங் என்னை ஆச்சரியப்படுத்தியது.அவருக்கும் எனக்கும் சேர்ந்த சிலகாட்சிகள் மிக அருமையாக வந்திருக்கின்றன.இந்தபடத்திம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் பாண்டிராஜ் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார்.டிரெய்லரில் ஒரு சிறியபெண் கதாபாத்திரம் வரும்.அவரை பார்த்தாலே அது தெரியும்.சினிமாவின் மாயம் அப்படித்தான் — யார் எப்போது அறிமுகமாகி எவ்வளவு உயரம் செல்வார்கள் என்று சொல்லமுடியாது.
சாண்டி மாஸ்டரை “லோகா” படத்தில் பார்த்தபோதே நான் மிகவும் இரசித்தேன்.என் மகள் அவருடைய பெரிய இரசிகை.இந்தபடத்தில் அவருடன் சேர்ந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன.யோகிபாபுவும் இந்தபடத்தில் வழக்கமான நகைச்சுவையைத் தாண்டி, உணர்ச்சிகளும் கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்க்குமரன் பற்றி சொல்லவேண்டும் என்றால்,ஒரு தயாரிப்பாளராக எந்த அழுத்தமும் எங்களுக்கு கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக்கொண்டார்.ஒரு சிறிய நடுத்தரவீட்டில்தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது.அந்தவீட்டை முழுவதும் மூடிவைத்து பகல்-இரவு காட்சிகள் எடுத்தோம்.ஆக்சிஜன் குறைவாக இருந்ததால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் வைரல் காய்ச்சல்,இருமல் வந்தது.ஆனால் கதையின்மீது இருந்த ஆர்வத்தால் அதை எல்லாம் மறந்து வேலைசெய்தோம்.
அசோசியேட் டைரக்டர்கள்,குறிப்பாக திவ்யா,இந்தப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்.ஜெகனும் தனது வேலையைத் தாண்டி,பாண்டிராஜ் மீது இருந்த அன்பால் முழுமையாக உழைத்தார்.
நானும் ஜெயராமும் பலவருடங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருக்கிறோம்.இந்த காம்பினேசனுக்கு எங்களுக்கே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.இந்தபடம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.ஒரு நடிகராக நாம் நடிக்கும் ஒவ்வொரு படமும் நல்லபடியாக அமையவேண்டும் என்று நினைத்தே வேலை செய்கிறோம்.ஆனால் இந்தபடம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம்,இதில் இருக்கும் எழுத்தாளரின் உழைப்பு.எங்களால் முடிந்தஅளவுக்கு அதை நேர்மையாக திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். இப்போது ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் போன்ற ஊடகநண்பர்களின் பங்கு மிகவும் முக்கியம்.அதனால் உங்கள் முழு ஆதரவும் எங்களுக்கு தேவை.மிகவும் நன்றி என்றார்.

நடிகர் ஜெயராம் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.பத்திரிகை நண்பர்கள்,என் நண்பர்கள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.இயக்குநர்,நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என இந்தபடத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தபடத்தைப் பற்றி ஏற்கனவே அனைவரும் நிறைய விசயங்கள் பேசிவிட்டார்கள்.நேரமும் ஆகிவிட்டதால் சுருக்கமாக பேச விரும்புகிறேன்.இந்தபடத்தின் ஆரம்பகட்டத்திலேயே லைக்கா போன்ற பெரிய நிறுவனம் இந்த சிறியபடத்துடன் இணைந்தது மிகப்பெரிய விசயம்.அதன்பிறகு தமிழ்க்குமரன் சார் போன்ற தயாரிப்பாளர் இந்தபடத்திற்குள் வந்தது,பாண்டிராஜ் சார் இயக்கம் ஏற்றது — இவை அனைத்தும் இந்தபடத்திற்கு பெரியபலமாக அமைந்தது.
அதோடு ஊர்வசி மேம்,சஞ்சனா,அனந்திகா,யோகி பாபு,மிஷ்கின் சார்,சிங்கம்புலி,சாண்டி மாஸ்டர் என பல சிறந்தகலைஞர்கள் இந்தபடத்தில் இணைந்தனர்.தொழில்நுட்பக்குழுவிலும் பிராக்ஸன் போன்ற இசையமைப்பாளர்,பிரதீப் போன்ற எடிட்டர்,ஜார்ஜ் போன்ற ஒளிப்பதிவாளர்,திவ்யா போன்ற அசோசியேட் இயக்குநர் ஆகியோர் கிடைத்தது இந்தபடத்தின் அதிர்ஷ்டம்.இந்த அனைத்துக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.ஆனால் ஒருவிசயம் மட்டும் சொல்லவேண்டும் என்றால்,இந்தபடத்தின் உண்மையான ஹீரோ எங்களுடைய திரைக்கதைதான்.முதன்முதலாக பாண்டிராஜ் சார் இந்தகதையை சொல்ல ஆரம்பித்தபோது,பாதிகதை கேட்கும் முன்பே இது ஒரு ஸ்பெஷலான படம் என்று எனக்கு தோன்றியது.
இந்தபடத்தில் நடந்த எல்லா விசயங்களும் மிகவும் பாசிடிவாக அமைந்திருக்கிறது.இனிமே இந்தபடத்தை மக்களிடம் சரியாக கொண்டுசேர்க்க வேண்டியது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவை.மிக்கநன்றி என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். சிறந்த நடிகர்கள் என்று சொன்னால் என் மனதில் முதலில் தோன்றுபவர்கள் ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி அம்மா.அவர்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு பெரியகனவு.இருவரும் மிகுந்த புத்திசாலித்தனமும்,ஆழமான உணர்வும் கொண்ட நடிகர்கள்.அவர்களுடன் ஒரேகாட்சியில் இருப்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.முன்னதாக ஒரு படத்திற்காக ஜெயராம் சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தேன்.நான் கதையை மிகவும் தீவிரமாகச் சொன்னேன்.அவர் அமைதியாக முழுக்கக் கேட்டுவிட்டு சிரித்தபடி,நான் செய்யலாம் தம்பி என்றார்.அந்த ஒரு வார்த்தையே எனக்கு பெரிய ஆச்சரியம் கொடுத்தது.
ஏன் அவர் பெரிய நடிகர் தெரியுமா? வாழ்க்கையில் “இல்லை” என்று சொல்லவேண்டிய இடத்தில் அதைத் தெளிவாக சொல்லத் தெரிந்தவர்.சினிமாவில் பலருக்கு அது முடியாது.எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லிவிடுவார்கள்.ஆனால் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது ஒரு பெரியகுணம்.ஜெயராம் சாரிடம் அந்த தெளிவு இருக்கிறது.
ஊர்வசி அம்மா பற்றி என்ன சொல்லவேண்டும்.நான் அவரை மிகவும் கவனித்து பார்த்திருக்கிறேன்.ஒரு காட்சியை சொன்னாலே அதை அவர் தன்னுடைய அனுபவத்தாலும் உணர்ச்சியாலும் இன்னொரு உயரத்திற்கு கொண்டு செல்வார்.அவருடைய நடிப்பில் ஒரு அதிசயமான இயல்பு இருக்கிறது.அதை கற்றுக்கொடுக்க முடியாது.“மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் கமல் சார் மற்றும் ஊர்வசி அம்மா நடித்த அந்த படிக்கட்டுகாட்சி — இந்திய சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை எனக்கு புரியவைத்த காட்சிஅது.நான் அந்தகாட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.ஒரு நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதைவிட,எதிரில் இருப்பவர் அதற்கு எப்படி பதிலளிக்கிறார் என்பதுதான் உண்மையான நடிப்பு என்று நான் நம்புகிறேன்.அந்தஅளவுக்கு இயல்பான நடிப்பை ஊர்வசி அம்மா கொடுத்திருக்கிறார்.நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன் என்று கேட்டால்,அந்தமாதிரியான காட்சிகள்தான் காரணம் என்று சொல்லுவேன். அந்தஅளவுக்கு பெரிய நடிகையுடன் வேலை செய்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.இதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
பாண்டியராஜை நான் பன்னிரண்டு வருடங்களாக அறிவேன்.ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் சந்திப்போம்.மெதுவாக பழக ஆரம்பித்தோம். அவர் அலுவலகத்திற்கு சென்றால் நண்பர்களோடு உட்கார்ந்து நீண்டநேரம் பேசிக்கொண்டே இருப்போம்.அந்தஇடம் ஒரு குடும்பம்போல உணர்வு தரும்.அவர் மிகவும் அன்பான மனிதர்.எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் எல்லோரிடமும் ஒரேமாதிரி அன்பாக நடந்துகொள்வார்.அந்த நட்புதான் இந்தபடத்திற்கும் காரணம்.
தமிழ்சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர்.ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். மணிரத்னம் சாரின் படங்களில் அழகான காட்சியமைப்புகள் இருக்கும்.சேரன் படங்களில் மனிதநேயம் மற்றும் தர்மம் இருக்கும். தியாகராஜன் குமாரராஜாவின் படங்களில் வித்தியாசமான பைத்தியக்காரத்தனம் இருக்கும்.அதுபோல பாண்டியராஜின் மிகப்பெரிய பலம் மொழி.
அவர் ஒரு வார்த்தையை இரசித்துவிட்டால் அதை உயிரோடு பிடித்து வைத்துக்கொள்வார்.வட்டார மொழி,மனிதர்கள் பேசும் இயல்பான சொற்கள்,அந்தமொழியின் நுணுக்கங்கள் — இவையெல்லாம் அவருக்குள் ஆழமாக பதிந்திருக்கின்றன.அவர் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை;அவர்களுடைய மொழியையும் கவனிக்கிறார்.அதனால்தான் அவர் படங்களில் உரையாடல்கள் மிகவும் இயல்பாக இருக்கும்.
ஒரு இயக்குநர் இருபது வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என்றால்,அவர் ஏதோ ஒரு விசயத்தில் அசாதாரண திறமை கொண்டவர் என்பதற்கே அது சாட்சி.
அப்படித்தான் பாண்டியராஜும்.அவர் பெரியகல்வி கற்றவரா என தெரியாது.ஆனால் மொழியை அவர் உயிரோடு உணர்கிறார். அதனால்தான் அவர் படங்களில் இருக்கும் உரையாடல்கள் மக்கள் மனதில் நேராக போய்சேர்கின்றன.அவருக்கு ஒரு பெரிய தெளிவு இருக்கிறது.ஒரு தயாரிப்பாளர் எனக்கு பணம் கொடுக்கிறார்;நான் அவருக்கு வெற்றிப்படம் கொடுக்கவேண்டும்.அதேநேரத்தில்,இரண்டுமணி நேரம் பார்வையாளரை மகிழ்விக்க வேண்டும் — இந்த இரண்டிலும் அவர் தெளிவாக இருக்கிறார்.அதனால்தான் அவர் படங்கள் வணிக ரீதியாகவும்,மக்களுக்கு நெருக்கமாகவும் இருக்கும்.
தமிழ்சினிமாவில் மிகவும் தெளிவாக சிந்திக்கும் இயக்குநர்களில் அவர் ஒருவர் என்று நான் நம்புகிறேன்.அவர் ஒரு காட்சியை எடுக்கும்போது தேவையற்ற குழப்பமே இருக்காது.எது வேண்டும்,எது வேண்டாம் என்று நேராகச் சொல்லிவிடுவார்.அதனால் நடிகர்களுக்கும் வேலை மிகவும் எளிதாகிவிடும்.
அவர் மிகவும் கட்டுப்பாடுடன் வேலை செய்கிறார்.காலையில் ஆறுமணிக்கே படப்பிடிப்புதளத்தில் இருப்பார்.எட்டுமணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிடுவார்.பட்ஜெட்டிற்குள்,திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிப்பதில் அவர் வல்லவர்.
இந்தபடத்தில் என்னை நடிக்க அழைத்தபோது,முதலில் ஒரு கதையைச் சொல்லவந்தார்.அவர் கதை சொல்லும்விதமே வேறமாதிரி. கதையை சொல்லிக்கொண்டே நம்மை அதற்குள் இழுத்துவிடுவார்.ஒரு டார்க்காமெடி கதையை அவர் சொல்லும்போது நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். உடனே “இது நன்றாக இருக்கும்” என்று நம்பிக்கை வந்தது.
இந்தபடத்தில் நடித்த அந்த இரண்டு இளம்நடிகைகளும் மிகவும் திறமையானவர்கள்.உடனுக்குடன் உணர்ச்சியைப் பிடித்து நடித்து விடுவார்கள்.சாண்டி மாஸ்டரும் அதேமாதிரி.அளவில்லாத ஆற்றல்.
மொத்தத்தில்,இந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோசமாக இருந்தது.சிரிப்பு, நட்பு, அன்பு நிறைந்த அனுபவமாக இருந்தது.இந்தபடம் மக்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம். பரிமளா அண்ட் கோ கதை மூன்றுவருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது.ஆரம்பத்தில் இதற்கு “பரிமளா ஃபேமிலி” என்ற தலைப்பு வைத்திருந்தோம்.பிறகு “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம்.“ஸ்வீட் ஹோம்” என்றுகூட ஒரு பெயர் வைத்திருந்தோம்.இறுதியில் “பரிமளா அண்ட் கோ” என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி,பிள்ளைகளிடம் கேட்டேன்.அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டு போட்டார்கள்.அசிஸ்டண்ட்கள், தயாரிப்பாளர்,நண்பர்கள் என எல்லோரிடமும் வாக்கெடுப்பு எடுத்தோம்.பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்தார்கள்.
இந்தகதையை முதலில் தமிழ்க்குமரன் சாரிடம் சொன்னபோது,அவர் சிரித்தவிதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது.அவர் சாதாரணமாக மிகவும் அமைதியாக இருப்பார்.ஆனால் கதைகேட்டு மனதார சிரித்தார்.அங்கேயே “இந்தபடம் கண்டிப்பாக மக்களிடம் வேலை செய்யும்” என்ற நம்பிக்கை வந்தது.
ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவரும் இந்தகதைக்குள் வந்ததும்,படம் பாதிவெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன்.அவர்கள் இருவரும் கதை கேட்டபோது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.ஜெயராம் சார் உடனே “இது கண்டிப்பாக பெரியஹிட் ஆகும்” என்றார்.அந்தஅளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது.மிஷ்கின் சாரிடம் கதை சொன்னபோதும்,அவர் வழக்கம்போல் அமைதியாக இருந்தார்.ஆனால் சிரித்துக்கொண்டே கேட்டார்.அவர் சிரித்தால் அது இரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகும் என்று எனக்கு தெரியும்.அங்கேயும் ஒரு நம்பிக்கை கிடைத்தது.
இந்தகதையில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியமானவை.வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் எப்போதும் சண்டை, சிரிப்பு,கலாட்டா நடந்து கொண்டே இருக்கும் இல்லையா? அந்த உணர்வை கொண்டுவரவே அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் உருவாக்கினோம்.அதற்காக சஞ்சனா,அனந்திகா ஆகியோரை தேர்வு செய்தோம்.அனந்திகாவின் ரீல்சை பார்த்தவுடனே அந்த எனர்ஜி பிடித்துவிட்டது.சஞ்சனாவிடம் கதை சொன்னபோது,ஆரம்பத்தில் உதவிஇயக்குநர் மாதிரி சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்தார்.பிறகு சிரிக்க ஆரம்பித்தார்.அப்போதே இந்தபடம் ஒர்க் ஆகும் என்று எனக்கு தோன்றியது.
ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவருக்கும் நான் மிகவும் நன்றி சொல்லவேண்டும்.குறிப்பாக ஊர்வசி மேம் ஒரு பெரிய பர்சனல் டிராஜிடி நடந்திருக்கும் நேரத்திலும்,ஷூட்டிங்கை நிறுத்தவேண்டாம்,நான் வந்து முடித்துவிடுகிறேன் என்று மறுநாளே வந்து நடித்தார்கள்.அது எங்களுக்கு மிகப்பெரிய விசயம்.அந்த மனநிலையில் கூட அவர்கள் நகைச்சுவை காட்சிகளை அற்புதமாக செய்தார்கள். இன்றுவரை அந்தகாட்சிகள் பார்க்கும்போதும் நாங்கள் சிரிக்கிறோம்.
ஒரு இயக்குநருக்கு ஒருகட்டத்திற்குப் பிறகு படம் போர் அடிக்க ஆரம்பிக்கும்.எடிட்டிங்,டப்பிங்,மிக்சிங் என்று மீண்டும் மீண்டும் பார்த்தால் காமெடி கூட சிரிப்பாக இருக்காது.ஆனால் ஜெயராம் சார் – ஊர்வசி மேம் காம்பினேஷன் மட்டும் கடைசிவரை ஃப்ரெஷ்ஷாக இருந்தது.இந்தபடத்தில் என் எனர்ஜிக்கு ஈடுகொடுத்தவர் சாண்டி மாஸ்டர்.நான் எவ்வளவு எனர்ஜியாக இருப்பேனோ,அதைவிட அதிகமாக இருப்பார்.காலையிலேயே முழுஎனர்ஜியுடன் வந்துவிடுவார்.அதேபோல் அந்த இரண்டுபெண்களும்.எந்தநேரம் சொன்னாலும் “ஓகே சார்” என்று வந்து நிற்பார்கள்.இந்தபடத்தில் இருந்த ஒவ்வொருவரும் முழுமனதுடன் உழைத்திருக்கிறார்கள்.
அனந்திகா,சஞ்சனா “இவர்கள் உண்மையிலேயே அக்கா–தங்கச்சிகளா?” என்று கேட்டார்கள்.அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருந்தார்கள்.உண்மையான அக்கா–தங்கைகள் போலவே செட்டில் எப்போதும் சண்டை, கலாட்டா, அன்பு என இருந்துகொண்டே இருப்பார்கள்.
மிஷ்கின் சார் மற்றும் அவருடைய தம்பி இருவரையும் முதன்முறையாக ஒரேபடத்தில் நடிக்க வைத்தது எனக்கு மிகவும் சந்தோசம். அந்த அண்ணன்–தம்பி பாசம் ரொம்ப அழகாக இருந்தது.செண்ட்ராயன்,பூர்ணிமா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக பூர்ணிமாவை ஒருநாள் முன்புதான் அழைத்தோம்.உடனே “நான் வருகிறேன்” என்று சொல்லி வந்து நடித்தார். அது எங்களுக்கு பெரிய உதவி.
மிஷ்கின் சாருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.கடந்த சிலநாட்களாக பிரமோசன்க்காக எல்லா இடங்களுக்கும் என்னுடன் வருகிறார்.நான் போகும் இடமெல்லாம் அவர் பின்னாலேயே வருகிறார்.“படத்துக்காக வர்றேன்” என்று சொல்வார்.அது எனக்கு மிகப்பெரிய அன்பு.ஜெயராம் சாரும் இந்தபடத்தை ஒரு பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எப்போதும் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்.என் முழுகுழுவும் அதே உற்சாகத்தோடு வேலை செய்தது.ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் — என் வேகத்துக்கு சரியாக பொருந்திய கேமராமேன்.என் படங்களில் மிகவும் தரமான விஷுவல் கொண்ட படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.இசையமைப்பாளர் பாக்ஸன் இந்தபடத்தின் மூலம் அறிமுகமாகிறார்.திங்க்மியூசிக் சந்தோஷ்மணி அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.அவரிடம் மிகப்பெரிய எனர்ஜி இருக்கிறது.இன்னொரு அனிருத் மாதிரி ஒரு தனித்துவமான இசையமைப்பாளராக வருவார் என்று நம்புகிறேன்.
இறுதியாக,லைக்கா நிறுவனம் இந்தபடத்துடன் இணைந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.சுபாஸ்கரன் சார் இலண்டனில் எங்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்தார்.இந்தப்படத்தையும் மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாகக் கொடுக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது.சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts