விமர்சனம்

கட்டா குஸ்தி 2 – திரைப்பட விமர்சனம்

2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி.நான்காண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.

சில படங்கள் முதல்பாகத்துக்கும் அடுத்தபாகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் இப்படம் முதல்பாகத்தில் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறது.

மனைவிகள் என்றால் அடிமைகள் என்கிற எண்ணம் கொண்ட கதாநாயகன் விஷ்ணுவிஷாலுக்கு அதிரடி மனைவி ஐஸ்வர்யாலட்சுமி அமைவதும் அதனால் நடக்கும் நிகழ்வுகளும் முதல்பாகத்தின் கதை.

இந்தபாகத்தில்,மனைவி தொடர்வண்டித்துறையில் வேலை செய்கிறார்.கணவன் குழந்தையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் வீட்டுக்கணவராக இருக்கிறார்.அவர்களுக்குள் எதிர்பாராத சிக்கல் ஏற்படுகிறது.அது மனைவி மணமுறிவு கேட்கிறவரை போகிறது.அதன்பின் என்னவாகிறது? என்கிற கேள்விக்கான விடைதாம் படம்.

முதல்பாகத்தில் தெனாவெட்டாகச் சுற்றித்திரியும் பெரும்பாலான கணவர்களின் பிரதிநிதிபோல் நடித்திருந்த விஷ்ணுவிஷால்,இதில் யாரும் ஒப்புமை சொல்லமுடியாத முன்னோடியான கதாபாத்திரத்தை ஏற்றதோடு,அதைத் திறம்படச் செய்து வியக்க வைத்திருக்கிறார்.இவரைப் போல் ஒரு கணவர் நமக்கு அமையவேண்டும் என ஒவ்வொரு பெண்ணும் ஏங்குகிற மாதிரியான வேடமேற்று அதில் மிகவும் இரசித்து நடித்திருக்கிறார்.மனைவி மீது பாசம் குழந்தை மீதான நேசம் ஆகியனவற்றை அவர் வெளிப்படுத்தும் விதங்கள் அழகோ அழகு.

ஐஸ்வர்யா லட்சுமி சும்மா பார்த்தாலே சூப்பராக இருக்குமென்பார்கள்.இப்படத்தில், பாசம் வேகம் கோபம் ஆகிய எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி பெரும் வரவேற்புப் பெறுகிறார்.

இவர்களுடைய மகளாக நடித்திருக்கும் சிறுமி சாரா,எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டார்.

பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் மோஷாவின் நடிப்பும் உடல்மொழியும் நன்று.அவரை அளவோடு பயன்படுத்தியிருப்பது மேலும் நன்று.

கருணாஸ் இந்தப்படத்திலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.முனிஷ்காந்த்,காளி வெங்கட்,கருணாகரன் ஆகியோரும் குறைவில்லை.

நீதிபதியாக ரம்யா கிருஷ்ணன்,போட்டி வர்ணனையாளராக யோகிபாபு ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து படத்துக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.

கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் உணர்வுகள் திரையிலும் குறைவின்றிப் பளிச்சிடுகின்றன.

ஷான் ரோல்டன் இசையில் சம்பவக்காரி, மகராசி உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் கேட்டுமகிழ வைக்கின்றன.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டு போயிருக்கிறார்.

பரத் விக்ரமன் படத்தொகுப்பில் படம் வெகுஇயல்பாகப் பயணித்து உற்சாகமூட்டுகிறது.

ஜெயச்சந்திரன் கலைஇயக்கத்தில் அரங்குகள் எல்லாம் உண்மைபோலவே இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் செல்லா அய்யாவு,குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து இரசித்து சிரித்து மகிழக்கூடிய படத்தைக் கொடுத்திருக்கிறார்.கூடவே சமுதாயத்துக்குத் தேவையான நல்லகருத்தையும் சொல்லி வரவேற்புப் பெறுகிறார்.

– கதிரோன்

Related Posts