அகிலன் – திரைப்பட விமர்சனம்
எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது என்று நினைத்த ஜெயம்ரவிக்கு இந்தப்படத்தில் வில்லன்கள் வேலை செய்யும் கரடுமுரடான வேலை.அதற்கும் நான் சளைத்தவனில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் ஜெயம்ரவி.
கடல், கப்பல், கடத்தல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாய அக்கறையுடன் உலக அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர் கல்யாணகிருஷ்ணன்.அதற்குப் பொருத்தமாக இருக்க தீவிரமாக முயன்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதனால் அவருடைய இரசிகர்களுக்கு நல்ல விருந்து. கூடுதல் மகிழ்ச்சியாக இன்னொரு வேடத்திலும் தோன்றி ஆச்சரியப்படுத்துகிறார் ஜெயம்ரவி.
பிரியாபவானிசங்கருக்குக் காவல்துறை அதிகாரி வேடம். அதைப் பார்த்துப் பயமோ பதட்டமோ இல்லாமல் அவரை இரசிக்கலாம் என்கிற அளவுக்கு அவருடைய வேடம் இருக்கிறது.
இன்னொரு நாயகி தன்யாரவிச்சந்திரனுக்கு அதிகக்காட்சிகளும் இல்லை, அதிக வேலையும் இல்லை.
பெரிய வில்லன் கூட்டமே படத்தில் இருக்கிறது. தருண்அரோரா,ஹரீஷ்பெரோடி, மதுசூதன், ஜிரக்ஜானி (இவர் உளவுத்துறை அதிகாரி என்றாலும் படத்தில் வில்லத்தனம் செய்யும் ஜெயம்ரவியைப் பிடிக்க அலைபவர் என்பதால் வில்லன் தானே) ஆகியோர் அவரவ்ர் வேடங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.
கரையைவிட கடற்கரையிலேயே அதிக அளவிலான காட்சிகள் அவற்றை இரசிக்கும்படி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கலாம். அவருடைய சிறப்பு பின்னணி இசைதான். அதில் குறை வைத்திருக்கிறார்.
என்.கணேஷ்குமாரின் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும்.
உலகின் பெரும்பகுதி கடல். உலகப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் அதில் நடக்கும் செயல்கள் குற்றச்செயல்கள் குறித்து இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் கல்யாண்கிருஷ்ணன்.
– குணா











