சினிமா செய்திகள்

கருப்பு வியாபாரமும் சூர்யாவின் சம்பளமும் – புதியதகவல்

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இதில் சூர்யாவுடன் த்ரிஷா,ஷிவதா,அனகா மாயா ரவி,இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு,இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.2025 ஆம் ஆண்டு ஆயுதபூசையையொட்டி அக்டோபர் முதல்தேதி படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது.அதன்பின் அக்டோபர் 20 தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.அதோடு இன்னும் பல வெளியீட்டுத் தேதிகளும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டன.ஆனால் அவற்றில் படம் வெளியாகவில்லை.

அதற்குக் காரணம்,இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் வியாபாரம் முடிவடையாமல் இருந்ததே.

அந்த வியாபாரம் முடிவடைந்தவுடன்,மே 14 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இப்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை வியாபாரமும் நடந்து முடிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற பலர் போட்டியிட்டனர்.

இறுதியில்,சக்தி ஃபிலிம் ஃபேக்டர் சக்திவேலன் வெற்றி பெற்றிருக்கிறார்.அவர் இந்தப்படத்தைத் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிடவிருக்கிறார்.

இதன்விலை என்ன?

இதற்காக அவர் கொடுத்திருக்கும் விலை சுமார் முப்பத்தேழு கோடி என்று சொல்லப்படுகிறது. மினிமம் கியாரண்டி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதில் இன்னொரு சுவாரசியமான தகவலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அது என்ன?

இந்தப்படத்துக்காக நாயகன் சூர்யாவுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லையாம்.படம் முடிந்து வியாபாரம் ஆகும் நேரத்தில் என் சம்பளத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று சூர்யா சொல்லியிருந்தாராம்.

அதன்படி, சூர்யா சம்பளத்துக்கு இணையாக தமிழ்நாடு வியாபாரம் இருக்கவேண்டும் என்று நினைத்து வியாபாரம் பேசினார்கள் என்று சொல்லப்பட்டது.

இப்போது முப்பத்தேழு கோடி என்று வியாபாரம் நடந்திருப்பதால் இந்தப்படத்தில் சூர்யாவின் சம்பளம் இதுதான் என்று சொல்கிறார்கள்.

ஆனால்,படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.நிச்சயம் பெரிதாக ஓடும்.அப்போது இந்தத் தொகையைவிடக் கூடுதலாகவே வரவு வரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.அதனால், சூர்யாவின் சம்பளம் இதைவிட அதிகமாகும் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும், படத்தின் வியாபாரம் நடக்கும்போது சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்று சூர்யா சொன்னதே ஒரு பெரிய முன்னுதாரணம், எல்லாக் கதாநாயகர்களும் இதைக் கடைபிடித்தால் நல்லது என விசயமறிந்தோர் சொல்கிறார்கள்.

Related Posts